ஊரை விட்டு 8 குடும்பம் தள்ளிவைப்பு; தென்காசி கலெக்டருக்கு நோட்டீஸ்
ஊரை விட்டு 8 குடும்பம் தள்ளிவைப்பு; தென்காசி கலெக்டருக்கு நோட்டீஸ்
ADDED : மார் 07, 2025 05:04 AM

கிராம பஞ்சாயத்தில், எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர், ஊரை விட்டு தள்ளி வைத்த விவகாரத்தில் தென்காசி மாவட்ட கலெக்டருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பகுதியில், நில ஆக்கிரமிப்புப் பிரச்னை தொடர்பாக ஒருவர் மீது, ஒரு குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர். அவர்களுக்கு ஆதரவாக மேலும் ஏழு குடும்பத்தினர் சேர்ந்தனர். இதையடுத்து, அந்த எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 30 பேரை, ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக கிராமத் தலைவர் உத்தரவிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பான செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, தேசிய மனித உரிமை கமிஷன், தானாக முன்வந்து விசாரணையை துவக்கியது. இது தொடர்பாக தென்காசி கலெக்டருக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பியது.
நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது: சாம்பவர் வடகரை பகுதியில், 30 பேரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததோடு, உள்ளூர் கடைகளில் பொருட்கள் வாங்குவது, அடிப்படை வசதிகள், கிராமத்தில் மற்றவர்களுடன் பழகுவது போன்றவைளும் தடுக்கப்பட்டிருந்தன. இது, மிகக் கடுமையான மனித உரிமை மீறல். மேலும், ஊரை விட்டு ஒதுக்கப்பட்டதை கண்டித்து, கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்திய 30 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிப்., 20ல், கிராமத் தலைவர் உத்தரவை பிறப்பித்திருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்காமல், அந்த உத்தரவை வாபஸ் வாங்குமாறு, அவருடன் வருவாய் கோட்டாட்சியர் பேச்சு நடத்தி இருக்கிறார். ஆனாலும், எந்த பயனும் ஏற்படவில்லை. இந்த ஒட்டுமொத்த விவகாரம் குறித்து, இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை அளிக்குமாறு தென்காசி மாவட்ட கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -