8,125 மின்னணு ஓட்டு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி துவக்கம்
8,125 மின்னணு ஓட்டு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி துவக்கம்
ADDED : ஏப் 09, 2024 11:28 PM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதிகளில் பயன்படுத்தப்பட உள்ள 8,125 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், சின்னத்துடன் கூடிய ஓட்டுச்சீட்டு பொருத்தும் பணி, பாரத் மின்னணுவியல் நிறுவன பொறியாளர்கள் வாயிலாக இன்று துவங்குகிறது.
காஞ்சிபுரம் லோக்சபா தனித் தொகுதியில் உள்ள 2,319 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், சின்னத்துடன் கூடிய ஓட்டுச்சீட்டு பொருத்தும் பணி இன்று துவங்குகிறது.
காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில், தி.மு.க., - அ.தி.மு.க., வேட்பாளர்கள் உட்பட 11 பேர் போட்டியிடுகின்றனர்.
காஞ்சிபுரம் லோக்சபா தொகுதி, திருப்போரூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம் என ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளடக்கியது.
இதில், 1,932 ஓட்டுச்சாவடிகளிலும், ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் தலா இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திங்கள், கட்டுப்பாட்டு இயந்திரம், ஓட்டுப்பதிவு சரிபார்ப்பு இயந்திரம் தலா ஒன்று, என, நான்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
இந்த தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், இரண்டாம் கட்டமாக குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இதில், ஆறு சட்டசபை தொகுதிகளிலும், 2,319 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், 11 வேட்பாளர்கள் பெயர், சின்னம் ஆகியவை பொருத்தும் பணி, பாரத் மின்னணுவியல் நிறுவன பொறியாளர்கள் வாயிலாக, இன்று துவக்கப்படுகிறது. இப்பணி, அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடக்கிறது.
தேர்தலன்று ஓட்டுச்சாவடிகளில் அனைத்து வசதிகளும் தயாராக வைத்திருக்க, பல்வேறு துறை அதிகாரிகளுக்கு, தேர்தல் நடத்தும் அதிகாரியான, கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார். ஆலோசனை கூட்டத்திலும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் ஓட்டுச்சாவடிக்குள் செல்ல ஏதுவாக, ரேம்ப் வசதி உள்ளதா என உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒரே இடத்தில், 10 ஓட்டுச்சாவடிகள் இருந்தால், அங்கு இரண்டு வீல்சேர்கள் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்காக, 626 வீல் சேர்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
வீல்சேரில் மாற்றுத்திறனாளியை அமரவைத்து, ஓட்டுச்சாவடிக்குள் அழைத்துச் சென்று, மீண்டும் வெளியே அழைத்துவர, ஒரு தன்னார்வலர் நியமிக்கப்படுகிறார்.
93 மாற்றுத்திறனாளிகள்
காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட, ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில் உள்ள மாங்காடு, மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளிக்குட்பட்ட ஓட்டுச்சாவடியில், அதிக மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த ஓட்டுச்சாவடியில், 93 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். இங்கு வீல்சேர், தன்னார்வலர்கள் அதிகளவில் நியமிக்கப்பட்டு, கூடுதல் வசதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதுார்
ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில், 5,806 ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், சின்னம் பொருத்தும் பணி, இன்று துவக்கப்படுகிறது. ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில், தி.மு.க., - அ.தி.மு.க., வேட்பாளர்கள் உட்பட 31 பேர் போட்டியிடுகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில் உள்ள மதுரவாயல், அம்பத்துார், ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், பல்லாவரம், தாம்பரம் ஆகிய சட்டசபை தொகுதிகள் அடங்கியுள்ளன.
இதில், 2,437 ஓட்டுச்சாவடிகளிலும், ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் தலா இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரம், ஓட்டுப்பதிவு சரிபார்ப்பு இயந்திரம் தலா ஒன்று என, நான்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
இதில், ஆறு சட்டசபை தொகுதிகளிலும், 4,874 ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், 31 வேட்பாளர்கள் பெயர், சின்னம் ஆகியவை பொருத்தும் பணி, பாரத் மின்னணுவியல் நிறுவன பொறியாளர்கள் வாயிலாக, இன்று துவக்கப்படுகிறது.
மேலும், இருப்பு வைக்கப்பட்டுள்ள 932 கூடுதல் ஓட்டுப்பதிவு இயந்திரங்களிலும், வேட்பாளர்கள் பெயர், சின்னம் பொருத்தப்படுகிறது. இப்பணி, அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடக்கிறது.

