2 மாதத்தில் ரூ.167 கோடி தங்கம் கடத்திய கும்பலில் 9 பேர் கைது
2 மாதத்தில் ரூ.167 கோடி தங்கம் கடத்திய கும்பலில் 9 பேர் கைது
ADDED : ஜூன் 30, 2024 01:04 AM
சென்னை:இரண்டு மாதங்களில், வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட, 167 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை, விமான நிலையத்திற்கு வெளியே கொண்டு சென்றது தொடர்பாக, விமான நிலைய கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் என, ஒன்பது பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
சென்னை சர்வதேச புறப்பாடு முனையத்தில் உள்ள கடைகளில், மற்ற நாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதாக, விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம் அங்குள்ள கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, டிரான்சிட் பயணியாக வந்த இலங்கை நபரை பிடித்து சோதனை செய்ததில், ஆசன வாயில் உள்பகுதியில், 3 பண்டல்களில் தங்க பசை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதன் தொடர்ச்சியாக, தங்க கடத்தல் தொடர்பாக, ஒன்பது பேர் சிக்கியுள்ளனர்.
இதுகுறித்து, சுங்க அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை விமான நிலைய சர்வதேச புறப்பாடு முனையத்தில், சபிர் அலி என்பவர் கடை வைத்துள்ளார்.
துபாய் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து, டிரான்சிட் பயணியர் வாயிலாக, சென்னைக்கு தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளது.
தங்கத்தை கடத்தி வரும் பயணியர், சபிர் அலி கடைக்கு அருகேயுள்ள பாத்ரூமில், தங்கத்தை வைத்து விட்டு, தகவல் கொடுத்து விடுவர். அதை எடுப்பதற்காக, 8 பேரை சபீர் அலி வேலைக்கு வைத்துள்ளார்.
தங்கத்தை எப்படி கடத்துவது என, அவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர். பல்லாவரத்தில் தங்கிய அவர்கள், ஷிப்டு அடிப்படையில் பணிக்கு வந்துள்ளனர்.
பயிற்சி முடித்த அந்த கடை ஊழியர்கள், நகைகளை ஆசன வாயிலின் உள் பகுதியில் பதுக்கி, விமான நிலையத்திற்கு வெளியே எடுத்துச் சென்று, உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவ்வாறு இரண்டு மாதங்களில், 167 கோடி ரூபாய் மதிப்பிலான, 267 கிலோ தங்கம் கடத்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது. இதன் வாயிலாக, கடை உரிமையாளர், 2.5 கோடி ரூபாயும்; ஊழியர்கள் தலா 10 லட்சம் ரூபாய் வரையும் சம்பாதித்து உள்ளனர்.
கடை உரிமையாளர் உள்ளிட்ட ஒன்பது பேரை கைது செய்துள்ளோம். இவர்களுடன் தொடர்பில் உள்ள வெளிநாட்டு, உள்நாட்டு நபர்கள் குறித்தும் விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

