கல்வி அலுவலர்கள் உட்பட 9 பேர் பிளஸ் 2 தேர்வு முறைகேடில் கைது
கல்வி அலுவலர்கள் உட்பட 9 பேர் பிளஸ் 2 தேர்வு முறைகேடில் கைது
ADDED : ஜூலை 26, 2024 01:55 AM
மதுரை:மதுரையில் கடந்த, 2023 மார்ச்சில் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் ஏப்ரலில் திருத்தப்பட்டபோது, ஒரு தனியார் பள்ளியில் தேர்வு எழுதிய இரண்டு மாணவர்களின் விடைத்தாள்கள் ஒரே கையெழுத்தில் இருந்தன.
சிவகங்கை மாவட்ட விடைத்தாள் திருத்தும் முகாமில் இது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இரண்டு மாணவர்களும் இயற்பியல் உட்பட மூன்று பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து கல்வித்துறை நடத்திய விசாரணையில் மதுரையில் நடந்த விடைத்தாள்கள் கலக்கும் முகாமில் முறைகேடு நடந்தது தெரிந்தது.
இதுகுறித்து நம் நாளிதழ் செய்தி வெளியிட்டது. சம்பந்தப்பட்ட மாணவர்களின் பிளஸ் 2 தேர்வு முடிவை கல்வித்துறை நிறுத்தி வைத்தது. சம்பந்தப்பட்ட மாணவர் ஒருவரின் தந்தை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், 'தனது மகனின் தேர்வு முடிவை வெளியிட வேண்டும்' என தொடர்ந்த வழக்கு விசாரணை தொடர்ச்சியாக சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில், 10 மாதங்களுக்கு மேல் நடந்த சி.பி.சி.ஐ.டி., விசாரணையில் நேற்று காலை சி.இ.ஓ., அலுவலகத்தில் உள்ள மதுரை டி.இ.ஓ.,  அலுவலகம் சென்ற தனிப்படை போலீசார் அங்கிருந்த முதுகலை கணினி ஆசிரியர் பரமசிவம், கண்காணிப்பாளர் பிரபாகரன், லேப் அசிஸ்டென்ட்டுகள் கண்ணன், கார்த்திக் ஆகிய நான்கு பேரை வேனில் ஏற்றிச் சென்றனர். மாலையில் அவர்களை கைது செய்த தகவல் சி.இ.ஓ., கார்த்திகாவிற்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டது.
இவ்வழக்கில் தொடர்புடைய தேர்வில் முறைகேடு செய்த ஒரு மாணவரின் பெற்றோரான தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பாளர் இளஞ்செழியன், அவரது மனைவி வனிதா, மற்றொரு மாணவரின் பெற்றோரான விநாயமூர்த்தி, கார்த்திகா உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.

