பத்தாம் வகுப்பு தேர்வில் 91.55 சதவீதம் தேர்ச்சி மாணவியர் சபாஷ்: சுயநிதி பள்ளிகள் 'டாப்'
பத்தாம் வகுப்பு தேர்வில் 91.55 சதவீதம் தேர்ச்சி மாணவியர் சபாஷ்: சுயநிதி பள்ளிகள் 'டாப்'
ADDED : மே 11, 2024 01:44 AM

சென்னை:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, கடந்த ஆண்டை விட, 0.16 சதவீதம் அதிகம். அத்துடன், மாணவர்களை விட மாணவியர், 5.95 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 26 முதல், ஏப்ரல் 8 வரை நடந்தது. இதில், 12,625 பள்ளிகளைச் சேர்ந்த, 8.94 லட்சம் மாணவ - மாணவியர் தேர்வு எழுதினர்.
தேர்வு முடிவுகளை, அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா, இணை இயக்குனர்கள் செல்வகுமார் மற்றும் நரேஷ் ஆகியோர் நேற்று காலை வெளியிட்டனர்.
தேர்வில், 91.55 சதவீதமான, 8.19 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 4.47 லட்சம் மாணவியர் தேர்வு எழுதியதில், 94.53 சதவீதமான, 4.23 லட்சம் பேரும்; 4.47 லட்சம் மாணவர்களில், 88.58 சதவீதமான, 3.96 லட்சம் பேரும் தேர்ச்சி பெற்றுஉள்ளனர்.
16,000 பேர் 'ஆப்சென்ட்'
ஒட்டுமொத்தத்தில், கடந்த ஆண்டு 91.39 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில், அதைவிட அதிகமாக, 0.16 சதவீதம், இந்த ஆண்டில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாநில அளவில், 4,105 பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அவற்றில், அரசு பள்ளிகள் 1,364; தனியார் பள்ளிகள் 2,741. பத்தாம் வகுப்பு தேர்வுக்கு, 9.10 லட்சம் பேர் பதிவு செய்ததில், 16,000 பேர் பங்கேற்கவில்லை. 32,348 தனித்தேர்வர்கள் பதிவு செய்ததில், 2,236 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
பள்ளிகளின் வகைப்பாடு வாரியான தேர்ச்சியில், தனியார் சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் 97.43 சதவீதம்; அரசு உதவி பெறும் பள்ளிகள் 91.77 மற்றும் அரசு பள்ளிகள் 87.90 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளன.
பாலின வகைப்பாட்டில், மகளிர் பள்ளிகள் 93.80 சதவீதத்துடன் அதிகபட்ச தேர்ச்சி பெற்றுள்ளன. இருபாலர் பள்ளிகள் 91.93 சதவீதம்; ஆண்கள் பள்ளிகள் 83.17 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
சிறைவாசிகள் தேர்ச்சி
இந்த தேர்வில், 13,510 மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதினர். அவர்களில், 92.45 சதவீதமாக 12,491 பேர் தேர்ச்சி பெற்றனர்.
சிறைவாசிகளை பொறுத்தவரை, 260 பேர் தேர்வு எழுதி, 228 பேர் தேர்ச்சி பெற்றனர்.
கடந்த 2020ம் ஆண்டில், 9.40 லட்சம் மாணவர்களும்; 2021ல் 9.60 லட்சம் மாணவர்களும் தேர்வு எழுதினர். 2022ம் ஆண்டில், 9.13 லட்சம் பேராக மாணவர் எண்ணிக்கை குறைந்தது. 2023ல், 9.14 லட்சமாக மாணவர் எண்ணிக்கை குறைந்தது.
இந்த முறை, கடந்த ஆண்டை விட, 20,000 பேர் குறைவாக, 8.94 லட்சம் பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றுள்ளனர். அதாவது, கடந்த ஐந்து ஆண்டுகளில், 10ம் வகுப்பு தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை, 50,000 பேர் வரை குறைந்துள்ளது.