செயலிழந்த 93 கேமராக்கள் தென்காசியில் அடுத்த அதிர்ச்சி
செயலிழந்த 93 கேமராக்கள் தென்காசியில் அடுத்த அதிர்ச்சி
ADDED : மே 01, 2024 11:19 PM
தென்காசி:தென்காசி ஓட்டு எண்ணிக்கை மையத்தில் நேற்று முன்தினம் 13கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்தன. தொடர்ந்து கலெக்டர் தலைமையில் கேமாரக்கள் மாற்றியமைக்கப்பட்டன.
தென்காசி பார்லி., தொகுதியில் தென்காசி, கடையநல்லுார், சங்கரன்கோவில், வாசுதேவநல்லுார், ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகள் அமைந்துள்ளன.
தென்காசி தொகுதி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, கடந்த மாதம்19ம் தேதி நடந்தது.
இந்த ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தென்காசி யு.எஸ்.பி., கல்லுாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மையத்தில் 209 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.24 மணி நேரமும், மையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சி ஏஜன்ட்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், தென்காசியில் நேற்று முன்தினம் மாலையில் திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்தது. இடி மற்றும் மின்னல் தாக்கியதில் தென்காசி யு.எஸ்.பி., கல்லுாரி ஓட்டு எண்ணிக்கை மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்கள் செயலிழந்தன. இதனால், அரசியல் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.
புகார் அளிக்கப்பட்டதும், தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர், ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு வந்தார். செயலிழந்த கண்காணிப்பு கேமராக்களை அவர் ஆய்வு செய்தார். இடி, மின்னல் காரணமாக கேமராக்கள் செயலிழந்தது தெரிய வந்தது. பின், அவை சீரமைக்கப்பட்டன.
நீலகிரி, ஈரோட்டில் கடும் வெயில் காரணமாக ஓட்டு எண்ணிக்கை மையங்களில் கண்காணிப்பு கேமாரக்கள் செயலிழந்தது. தற்போது தென்காசி ஓட்டு எண்ணிக்கை மையத்தில் ௯௩ கண்காணிப்பு கேமராக்கள் இடி, மின்னல் தாக்கியதில் சேதமடைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கண்காணிப்பு கேமாரக்கள் தொடர்ந்து செயலிழந்து வரும் சம்பவங்களால் அரசியல் கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
'உடனே சீரமைக்கப்பட்டன'
கலெக்டர் கமல் கிஷோர் கூறுகையில், ''இடி, மின்னல் காரணமாக, தென்காசி ஓட்டு எண்ணிக்கை மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்தன. உடனே தொழில்நுட்ப வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டு, கேமராக்கள் சீரமைக்கப்பட்டன. மொத்தமாக ௯௩ கேமராக்கள் பழுதடைந்தன. இவற்றைமாற்றியமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.
சந்தேகம் ஏற்படுகிறது
தென்காசி தொகுதி ஓட்டு எண்ணிக்கை மையத்தில், மழை காரணமாக ௯௩ கண்காணிப்பு கேமாரக்கள் பழுதடைந்துள்ளன. ௫ மணி நேரம் கழித்துதான் பழுதடைந்த கேமராக்கள் சரி செய்யப்பட்டுள்ளன. இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
கிருஷ்ணசாமி,
தலைவர், புதிய தமிழகம்

