UPDATED : ஏப் 13, 2024 03:59 AM
ADDED : ஏப் 13, 2024 12:16 AM

சென்னை:சத்தியமங்கலம் வனப்பகுதியில், தாயை இழந்து தனியாக தவித்த குட்டி யானை மீட்கப்பட்டு, வேறு கூட்டத்தில் சேர்க்கப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் உள்ளிட்ட பல்வேறு வனப்பகுதிகளில், தாயை விட்டு குட்டி யானைகள் பிரிந்து தவிப்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்த சமயத்தில் உரிய பாதுகாப்பு, பராமரிப்பு கிடைக்காவிட்டால், குட்டி யானைகள் இறந்து விடும்.
வனப்பகுதிகளில் யானை கூட்டங்களின் நடமாட்டத்தை, வனத்துறையினர் துல்லியமாக கண்காணித்து வருகின்றனர். இதனால், தாயை பிரியும் குட்டி யானைகளை உடனடியாக மீட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
காப்பாற்ற முயற்சி
இந்நிலையில், சில நாட்களுக்கு முன், சத்தியமங்கலம் பகுதியில் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு பெண் யானை, 2 வயது குட்டியுடன் தவிப்பது வனத்துறையினருக்கு தெரிய வந்தது. கால்நடை மருத்துவர்கள், கள பணியாளர்களுடன் வனத்துறையினர் அங்கு விரைந்தனர்.
நோய்வாய்ப்பட்ட பெண் யானையை காப்பாற்ற, பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், சிகிச்சை பலனின்றி பெண் யானை இறந்துவிட்டது. இதனால், 2 வயது குட்டி யானை, ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டது.
இந்நிலையில், அந்த குட்டி யானையை வேறு யானை கூட்டத்துடன் சேர்க்க வனத்துறையினர் முயற்சி செய்தனர். தெர்மல் கேமரா, ட்ரோன் கருவிகளை பயன்படுத்தி, அக்கம் பக்கத்தில் வேறு யானை கூட்டங்களின் நடமாட்டம் இருக்கிறதா என, வனத்துறையினர் தேடினர்.
வளர்ப்பு தாய்
பெண் யானை இறந்த இடத்துக்கு பக்கத்தில், வேறு ஒரு யானை கூட்டம் நடமாடுவது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் நடமாட்டம் அடுத்து எங்கு இருக்கும் என்பதை கவனித்து, அந்த வழியில் தாயை இழந்த குட்டி யானை கொண்டு செல்லப்பட்டது. அங்கு, குட்டி யானை வேறு கூட்டத்தில் சேர்க்கப்பட்டது. அந்த கூட்டத்தில் இருந்த வேறு பெண் யானை, இந்த குட்டி யானைக்கு வளர்ப்பு தாயாக மாறியுள்ளதை வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர்.
இந்த பணியில் ஈடுபட்ட வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள் ஆகியோருக்கு, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமை செயலர் சுப்ரியா சாஹு, சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

