ADDED : மார் 12, 2025 04:22 AM

சென்னை : 'டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடந்துள்ள ஊழல் குறித்து, தமிழக மக்களுக்கு விரிவான அறிக்கை வழியாக, அரசு தெரிவிக்க வேண்டும்' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
சென்னையில் டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில், அமலாக்கத் துறை மூன்று நாட்கள் சோதனை நடத்தி உள்ளது; பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. மதுபானம் கொள்முதல் மற்றும் விற்பனையில், சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்ததாகவும் தகவல்கள் வருகின்றன. இதன் வழியே, தி.மு.க., ஆட்சி, மக்களுக்கான ஆட்சி அல்ல என்பது தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.
இது குறித்து முதல்வர் வாய் திறக்காமல், தொகுதி மறுவரையறை, மும்மொழிக் கொள்கை என திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது கண்டனத்துக்கு உரியது.
மொத்தத்தில், தமிழகத்திற்கு மிகப்பெரிய தலைகுனிவை தி.மு.க., அரசு ஏற்படுத்தி இருக்கிறது. அரசுக்கு மிகப்பெரிய வருவாயை ஈட்டித் தருகிற, டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடந்துள்ள ஊழல் குறித்து, தமிழக மக்களுக்கு விரிவான அறிக்கை வழியே அரசு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.