ரூ.42 கோடி கோயில் நிலத்திற்கு வெறும் 3000 ரூபாயில் வாடகை அரசாணையை எதிர்த்து வழக்கு
ரூ.42 கோடி கோயில் நிலத்திற்கு வெறும் 3000 ரூபாயில் வாடகை அரசாணையை எதிர்த்து வழக்கு
ADDED : செப் 14, 2024 02:45 AM
சென்னை:மயிலாப்பூரைச் சேர்ந்த 'இண்டிக் கலெக்டிவ்' அறக்கட்டளை நிர்வாகி டி.ஆர்.ரமேஷ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமாக, பசுமை வழிச்சாலையில் 10 கிரவுண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை, 2010 முதல் 29 ஆண்டுகள் 11 மாதங்களுக்கு, 'இந்திய மாதர் சங்கம்' என்ற அமைப்புக்கு குத்தகை வழங்க ஒப்புதல் அளித்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலத்தின் மதிப்பு 42 கோடி ரூபாய். ஆனால், மாதம் 3,000 ரூபாய் வாடகைக்கு நிலத்தை வழங்கும் வகையில், அரசாணை பிறப்பித்துள்ளனர்.
நியாயமான வாடகை நிர்ணயிக்கப்படாததால், கோவிலுக்கு பல கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, தனியார் ஆடிட்டரை நியமித்து, இழப்பீட்டை கணக்கிடுவதோடு, கோவிலுக்கு உரிய இழப்பீட்டை வசூலிக்க உத்தரவிட வேண்டும்.
குறைவான வாடகை நிர்ணயித்து, அறநிலையத் துறை 2011ல் பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அறநிலையத்துறை சார்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, ''நிலத்தை குத்தகைக்கு கொடுப்பது தொடர்பாக ஆட்சேபங்கள் கோரியபோது, 2012ல் மனுதாரரும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.
''இந்த வழக்கை, 12 ஆண்டுகளுக்கு பின், மனுதாரர் தாக்கல் செய்துள்ளார். தற்போது, அந்த நிலத்துக்கு 4 லட்சம் ரூபாய் வாடகை நிர்ணயிப்பது தொடர்பாக, அறநிலையத்துறை கமிஷனர் பரிந்துரை அனுப்பியுள்ளார்,'' என்றார்.
அதற்கு மனுதாரர் சார்பில், 'கடந்த 2011ம் ஆண்டு அரசாணையை திரும்ப பெற கூறி, 2013ல் அறநிலையத் துறை கமிஷனர் அளித்த பரிந்துரை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை' என, குற்றம் சாட்டப்பட்டது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட முதல் பெஞ்ச், இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, அறநிலைய துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.