கிரிவல பாதையில் ஆக்கிரமிப்பு அகற்றல் கண்காணிக்க ஓய்வு நீதிபதி தலைமையில் குழு
கிரிவல பாதையில் ஆக்கிரமிப்பு அகற்றல் கண்காணிக்க ஓய்வு நீதிபதி தலைமையில் குழு
ADDED : செப் 14, 2024 07:07 PM
சென்னை:திருவண்ணாமலை கிரிவல பாதையில் சட்டவிரோத கட்டடங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கண்காணிப்பு குழுவை நியமித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலின் கிரிவல பாதையில் உள்ள சட்டவிரோத கட்டடங்கள், ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட கோரி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய, 'முதல் அமர்வு' முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, உயர் நீதிமன்றம் ஏற்கனவே நியமித்த வழக்கறிஞர் எம்.சி.சுவாமி குழு அறிக்கை தாக்கல் செய்தது. அதில், 'ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன என்பதால், அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.
மனுதாரர் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், “கிரிவல பாதை, மலையை ஆக்கிரமித்த நபர்களுக்கு சட்ட விரோதமாக பட்டா வழங்கப்பட்டு உள்ளது.
எனவே, அனைத்து துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து, விதிமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்,” என்றார்.
இதையடுத்து, திருவண்ணாமலை கிரிவல பாதை மற்றும் மலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை ஒருங்கிணைத்து கண்காணிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜன் தலைமையில், நில நிர்வாக ஆணையர், மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்.பி., அறநிலையத் துறை இணை ஆணையர், வனப்பாதுகாவலர் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு குழுவை அமைத்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இக்குழு அவ்வப்போது ஆய்வு நடத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, பட்டாக்களை ரத்து செய்வது குறித்து அறிவுறுத்தல்களை வழங்குவதோடு, இப்பணிகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.