தயாரிப்பு குறைபாடுடன் லேப்டாப் விற்ற நிறுவனம் ரூ.20,000 இழப்பீடு தர உத்தரவு
தயாரிப்பு குறைபாடுடன் லேப்டாப் விற்ற நிறுவனம் ரூ.20,000 இழப்பீடு தர உத்தரவு
ADDED : ஜூன் 14, 2024 02:29 AM
சென்னை:தயாரிப்பு குறைபாடுடன் கூடிய பொருளை வாங்கி பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு, 20,000 ரூபாய் இழப்பீட்டையும், பழுது பார்ப்பு கட்டணத்தையும் 'ஆப்பிள்' நிறுவனம் வழங்க வேண்டும் என, சென்னை வடக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த விஜயன் என்பவர் தாக்கல் செய்த மனு:
ஆன்லைன் நிறுவனமான அமேசானில், 2020 டிசம்பரில், 66,000 ரூபாயில், 'ஆப்பிள் மேக்புக் ஏர்' மாடல் லேப்டாப் வாங்கினேன். இதற்கு, 2021 டிசம்பர் வரை சர்வதேச வாரண்டி இருந்தது. புதிய லேப்டாப்பை பயன்படுத்தி வந்த போது, திடீரென டிஸ்பிளேயில் சிறிய விரிசல் ஏற்பட்டது. நாளடைவில் டிஸ்பிளேயில் விழுந்த விரிசல் விரிவடைந்தது.
பின், அண்ணா நகர் கிழக்கில் உள்ள அதிகாரப்பூர்வ சர்வீஸ் சென்டரில், லேப்டாப்பை பழுது பார்க்க எடுத்துச் சென்றேன். ஆனால், வாரண்டி காலம் இருந்தும், பழுது பார்க்க முடியாது என்று சர்வீஸ் சென்டர் பிரதிநிதிகள் கூறினர்.
மேலும், என்னைப் போலவே, இந்த மாடலை வாங்கிய பல வாடிக்கையாளர்கள், உலகம் முழுதும் இதே பிரச்னையை எதிர்கொண்டு வருவதும், தயாரிப்பு குறைபாடால் இப்பிரச்னை உள்ளது என்றும், சர்வீஸ் சென்டர் பிரதிநிதிகள் தெரிவித்தனர். வாரண்டி இருந்தும், அந்த பழுதை சரிபார்க்க, 37,000 ரூபாய் கட்டணம் வசூலித்தனர்.
நான் வாங்கிய பொருளுக்கு சர்வதேச வாரண்டி இருந்தும், பழுதை நீக்க முடியாமலும், பண விரையமும் ஏற்பட்டதால், மன உளைச்சலுக்கு ஆளானேன்.
எனவே, இழப்பீடாக, 5 லட்சம் ரூபாய்; டிஸ்பிளே மாற்றிய செலவுத் தொகை, 37,000 ரூபாய்; சேவை குறைபாடுக்கு ஒரு லட்சம் ரூபாய்; வழக்கு செலவுக்கு, 20,000 ரூபாயும் வழங்க, பெங்களூரில் உள்ள ஆப்பிள் நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
மனுவை, சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற தலைவர் ஜி.வினோபா, உறுப்பினர்கள் கவிதா கண்ணன், ராமமூர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்தது. பின் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
தயாரிப்பு நிறுவனம் சேவை குறைபாடும், நியாயமற்ற வர்த்தக நடைமுறையையும் செய்தது தெரியவருகிறது. எனவே, மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு, 20,000 ரூபாய்; பழுது பார்ப்பு கட்டணம், 37,000 ஆயிரம் ரூபாய்; வழக்கு செலவாக 5,000 ரூபாயும், மனுதாரருக்கு ஆப்பிள் நிறுவனம் வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

