சபாநாயகருக்கு எதிரான புகார்: முதன்மை நீதிபதிக்கு உத்தரவு
சபாநாயகருக்கு எதிரான புகார்: முதன்மை நீதிபதிக்கு உத்தரவு
ADDED : ஜூன் 25, 2024 06:06 AM

சென்னை: கடந்த ஆண்டு, சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில், சபாநாயகர் அப்பாவு பேசினார்.
அப்போது, ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த 40 எம்.எல்.ஏ.,க்கள், தி.மு.க.,வில் இணைய தயாராக இருந்ததாகவும், அதை ஏற்க, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மறுத்து விட்டதாகவும் கூறியிருந்தார்.
சபாநாயகரின் பேச்சு, அ.தி.மு.க.,வின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளதாக, அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலர் பாபு முருகவேல், சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
பின், மனுவுக்கு எண் வழங்கி விசாரணைக்கு எடுக்க, முதன்மை செஷன்ஸ் நீதிபதிக்கு உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்றத்தில் பாபு முருகவேல் மனுத் தாக்கல் செய்தார்.
மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் லீலேஷ் சுந்தரம், ''முதன்மை செஷன்ஸ் நீதிபதி முன், புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
இதையடுத்து, புகாரை கோப்புக்கு எடுத்து, சட்டப்படி நடவடிக்கையை தொடர, முதன்மை செஷன்ஸ் நீதிபதிக்கு, நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.