தலித் தமிழக முதல்வராவது சாத்தியமற்றதல்ல: ராமதாஸ்..
தலித் தமிழக முதல்வராவது சாத்தியமற்றதல்ல: ராமதாஸ்..
ADDED : ஆக 17, 2024 02:32 AM
சென்னை: 'வன்னியர், -பட்டியலின சமுதாயங்கள் இணைந்தால், பட்டியலினத்தைச் சேர்ந்தவர் தமிழக முதல்வராக முடியும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
'தமிழகத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக முடியாது' என்ற வி.சி., தலைவர் திருமாவளவனின் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.
தமிழகத்தின் தனிப்பெரும் வன்னியர் சமுதாயமும் தனிப்பெரும் சமுதாய தொகுப்பான பட்டியலினமும், இணைந்தால், தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை எளிதில் கைப்பற்ற முடியும்.
'பா.ம.க., வெற்றி பெற்றால் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வர் ஆக்குவோம்' என, 30 ஆண்டுகளுக்கு முன்னரே அறிவித்தேன். ஆட்சி அதிகாரத்தை தொடர்ந்து அனுபவித்து வந்தவர்கள் மேற்கொண்ட பிரித்தாளும் சூழ்ச்சியால், பட்டியலினத்தைச் சேர்ந்தவரோ, வன்னியர் இனத்தவரோ இன்று வரை முதல்வராக முடியவில்லை.
கடந்த 57 ஆண்டு திராவிட ஆட்சியில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் துணை முதல்வராக, அதிகாரமிக்க அமைச்சராகக்கூட வர முடியவில்லை. பட்டியலினத்தவர் தமிழக முதல்வராவது சாத்தியமற்றது அல்ல. நம்மால் முடியாது என்று சதிவலையில் மயங்கிக் கிடப்பதை விடுத்து, நம்மால் முடியும் என்று பட்டியலினத்தவர் நினைக்க வேண்டும்.
நாம் வீழ்ந்து கிடக்க வேண்டும் என நினைக்கும் சக்திகளை அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும். இந்த விழிப்புணர்வும் சமூக ஒற்றுமையும் ஏற்பட்டால், தமிழக முதல்வராக பட்டியலினத்தைச் சேர்ந்தவர் வருவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

