ADDED : செப் 18, 2024 12:55 AM
சென்னை:அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், முதற்கட்ட கவுன்சிலிங் முடிவில், 1,423 எம்.பி.பி.எஸ்., - 1,566 பி.டி.எஸ்., இடங்கள் மீதம் இருந்தன. இந்த இடங்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், https://tnmedicalselection.net என்ற இணையளத்தில், 14ம் தேதி துவங்கி, நேற்றுடன் முடிந்தது. இதில், இடங்கள் பெற்றவர்கள் விபரம், 19ம் தேதி வெளியிடப்படுகிறது. அவர்கள், ஒதுக்கப்பட்ட கல்லுாரிகளில் 26ம் தேதிக்குள் சேர வேண்டும்.
இந்த கவுன்சிலிங்கில் இடம் பெற்றவர்கள், அனுமதிக்கப்பட்ட தேதிக்குப்பின் படிப்பை கைவிட்டால், அபராதம் வசூலிக்கப்படும் என, மருத்துவ கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்குனரக அதிகாரிகள் கூறியதாவது:
இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் இடம் பெற்றவர்கள், அவற்றை கைவிட நினைத்தால், முன்கூட்டியே தெரிவிக்கப்படும் தேதிக்குள் கைவிடலாம். அதன்பின் கைவிட்டால், 10 லட்சம் ரூபாய் அபராதம்; கல்வி கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், ௧ லட்சம் ரூபாய் வைப்பு தொகையும் திருப்பி தரப்பட மாட்டாது. இந்த நடைமுறை, மூன்றாம் மற்றும் இறுதி கட்ட கவுன்சிலிங்கில் பின்பற்றப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.