கோர்ட் உத்தரவை தவறாக புரிந்த செயல் அலுவலருக்கு ரூ.5,000 அபராதம்
கோர்ட் உத்தரவை தவறாக புரிந்த செயல் அலுவலருக்கு ரூ.5,000 அபராதம்
ADDED : செப் 10, 2024 11:46 PM
மதுரை:மணவாளக்குறிச்சி அருகே பெருவிளையைச் சேர்ந்த மரிய ஜெயந்தன் என்பவர், 'ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக எனக்கு எதிராக மணவாளக்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலர் நடவடிக்கை மேற்கொண்டார்.
'அது தொடர்பான உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என, உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார்.
முன்னுதாரணம்
அதை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு பிறப்பித்த உத்தரவு:
இந்த நீதிமன்றத்தின் உத்தரவை அரசு தரப்பில் துஷ்பிரயோகம் செய்து, தவறாக பயன்படுத்த முயற்சித்ததற்கு இது ஒரு முன்னுதாரணமான வழக்கு.
ஏற்கனவே ஒருவர், 'மணவாளக்குறிச்சியில் ஒரு சர்வே எண்ணிலுள்ள நிலம் அரசு புறம்போக்கு நடைபாதை என வகைப்படுத்தப்பட்டுள்ளது. சில தனிநபர்கள் ஆக்கிரமித்து அங்கீகாரமற்ற கட்டுமானம் அமைத்துள்ளனர். அகற்ற உத்தரவிட வேண்டும்' என, இந்த நீதிமன்றத்தில் மனு செய்தார்.
இதற்கு, 'மனுவின் தகுதிகளை நீதிமன்றம் ஆராயவில்லை. சம்பந்தப்பட்ட தனிநபர்கள் விளக்கமளிக்க வாய்ப்புகள் உள்ளன. பின், 12 வாரங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்' என உத்தரவிட்டது.
இதை குறிப்பிட்டு, நடைபாதையில் ஆக்கிரமிப்பை அகற்ற மனுதாரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, கல்குளம் தாசில்தாருக்கு மணவாளக்குறிச்சி செயல் அலுவலர் கடிதம் அனுப்பினார். நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கவில்லை.
மனுவின் தகுதிக்குள் செல்லவில்லை என ஏற்கனவே இந்த நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இதை தவறாக புரிந்து கொண்டு, செயல் அலுவலர் மனுதாரரை அச்சுறுத்தம் வகையில் தாசில்தாருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்த நீதிமன்ற உத்தரவை குறிப்பிட்டு, 'ஆக்கிரமிப்பை அகற்ற பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என, மணவாளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மற்றொரு கடிதத்தை செயல் அலுவலர் அனுப்பியுள்ளார்.
விசாரணை
மனுதாரருக்கு எதிராக செயல் அலுவலர் எழுதிய இரண்டு கடிதங்களும் ரத்து செய்யப்படுகின்றன. சட்டப்படி முறையான விசாரணை நடத்தி, ஆக்கிரமிப்பு இருப்பது கண்டறியப்பட்டால், பின் அதை அகற்ற வேண்டும்.
கடிதத்தில் பொருத்தமற்ற வார்த்தைகளை பயன்படுத்தி, மனுதாரரை தேவையின்றி இந்த நீதிமன்றத்தை நாட வைத்ததற்காக செயல் அலுவலருக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கிறோம்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.

