கருக்கா வினோத்தால் சிக்கிய பாலியல் தொழில் கும்பல்
கருக்கா வினோத்தால் சிக்கிய பாலியல் தொழில் கும்பல்
UPDATED : மே 24, 2024 10:16 AM
ADDED : மே 24, 2024 06:35 AM

சென்னை: ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டுகள் வீசிய கருக்கா வினோத்தை ஜாமினில் வெளியே எடுத்த பெண் தான், பள்ளி மாணவியரை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள, கவர்னர் மாளிகையான ராஜ்பவன் முன், அக்., 25ல், நந்தனம் எஸ்.எம். நகரைச் சேர்ந்த ரவுடி கருக்கா வினோத்,42, இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசினார்.
இதற்கு முன், தி.நகரில் உள்ள, தமிழக பா.ஜ., அலுவலகத்திலும் பெட்ரோல் குண்டு வீசினார். இது தொடர்பாக கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஜாமினில் வெளியே வந்த போது, தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ., எனும் 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்பினருடன் வெளியே வந்தார்.
இதனால், ராஜ்பவன் மீதான பெட்ரோல் குண்டு வீச்சு பின்னணியில் பயங்கரவாதிகள் இருக்கலாம் என்பதால், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரித்தனர். அப்போது, கருக்கா வினோத்தை ஜாமினில் வெளியே எடுத்தது யார் என்ற கேள்வி எழுந்தது.
கருக்கா வினோத் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடுகளில் சோதனை நடத்தினர். அப்போது, சென்னை, தி.நகர் டாக்டர் தாமஸ் சாலையைச் சேர்ந்த நதியா, 37 என்பவரின் வீட்டிலும் சோதனை நடந்தது. அங்கு சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
அது தொடர்பாக, சமீபத்தில், நதியாவிடம் விசாரித்தனர். அப்போது அவரது மொபைல் போனை ஆய்வு செய்தில், அதில், சிறுமியரின் ஆபாச படங்கள் இருந்தன. இதுகுறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு விபசார தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில், நதியாவின் நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்தனர். அவர், சென்னை வளசரவசக்கம் ஜெய் நகர், 2 வது தெருவில், பள்ளி சிறுமியரை வைத்து பாலியல் தொழில் நடத்தியது தெரியவந்தது.
இது தொடர்பாக, நதியா, 37 மற்றும் அவரது உறவினர்கள், சுமதி,43, ஜெயஸ்ரீ,43 உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். நதியா தன் மகள் வாயிலாக பள்ளி சிறுமியருக்கு வலை விரித்து அவர்களை பாலியல் தொழிலில் தள்ளியது அம்பலமானது. அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீசார் முடிவு செய்து உள்ளனர்.