டில்லி போலீஸ் கமிஷனர் பெயரில் பணம் பறிக்க மிரட்டும் கும்பல்
டில்லி போலீஸ் கமிஷனர் பெயரில் பணம் பறிக்க மிரட்டும் கும்பல்
ADDED : செப் 09, 2024 06:10 AM

சென்னை : 'சிறுமியரின் ஆபாச வீடியோவை பார்த்ததால், இரவுக்குள் கைது செய்யப்படுவீர்கள்' என, டில்லி போலீஸ் கமிஷனர் பெயரில் மிரட்டல் விடுக்கும் கும்பலை, சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரியான சஞ்சய் அரோரா, டில்லி போலீஸ் கமிஷனராக பணிபுரிந்து வருகிறார்.
அவரது பெயரில், சென்னை மதுரவாயலை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிக்கு, 'இ - மெயில்' வாயிலாக கடிதம் ஒன்று அனுப்பப்பட்டு உள்ளது. அதில், தேசிய புலனாய்வு நிறுவனமான, என்.ஐ.ஏ., மற்றும் மத்திய உளவு அமைப்பான, ஐ.பி., முத்திரைகள் இடம் பெற்றுள்ளன.
'டாப் சீக்ரெட்' என்று அச்சிடப்பட்டுள்ள அந்த கடிதத்தில், 'சிறுமியர் ஆபாச வீடியோக்கள் பார்ப்பவர்களை, மத்திய உளவு அமைப்புகளுடன் இணைந்து, டில்லி சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசாராகிய நாங்கள் கண்காணித்து வருகிறோம்.
உங்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றுள்ளோம். இரவுக்குள் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள்.
அதிலிருந்து தப்பிக்க, நாங்கள் தெரிவிக்கும் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்ப வேண்டும்' என, மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, டில்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா கூறுகையில், “சைபர் மோசடி கும்பல், இதுபோன்று மிரட்டல்கள் விடுத்து, பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அக்கும்பலை தேடி வருகிறோம்,” என்றார்.