ADDED : மார் 08, 2025 08:14 AM

ஆண்களுக்கு இணையாக மட்டுமல்ல சில துறைகளில் ஆண்களை மிஞ்சியும் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வரிசையில் சட்ட ஆலோசகர், பேச்சாளர், தொழில் முனைவோர், வர்த்தகர் என்பதையும் தாண்டி ஆண்களே அதிகம் இயங்கும் ஜோதிட, வாஸ்து துறையிலும் சாதனை படைத்து வருகிறார் சேலத்தை சேர்ந்த டாக்டர் கனிமொழி.
அவர் கூறியது:
சட்டம் பயின்றவள் நான். என்றாலும் நாளை என்ன நடக்கும் என்பதை அறிய உதவும் ஜோதிடமும் பயில சிறிய வயதிலேயே ஆர்வம் இருந்தது. தினமலர் நாளிதழில் வெளியாகும் தினசரி பலன்கள், ஆன்மிகமலரில் வரும் மாத, ஆண்டு பலன்களை வீட்டில் முதல் ஆளாக படித்து விடுவேன். சட்டம் படித்து கொண்டே ஜோதிட கலையையும் கற்றேன். ஜெர்மனி பல்கலையில் ஜோதிடத்திற்கான சிறப்பு படிப்புகளை படித்தேன். அதில் பி.எச்.டியும் முடித்தேன்.
சட்ட படிப்பை முடித்த கையுடன் பாரத ஸ்டேட் வங்கியில் சட்ட ஆலோசகர் பணி கிடைத்தது.
திருமணமாகி குழந்தைகள் பிறந்ததால் பணியை துறக்க வேண்டியானது. கணவர் டைல்ஸ், குவாரி பிசினஸ் செய்பவர். கணவருக்கு உதவியாக டைல்ஸ் விற்பனையை கவனித்தபடி தொழில் முனைவோருக்கு ஆலோசனை வழங்கி வந்தேன்.
ஜோதிடம் படித்திருந்ததால் தெரிந்தவர்களுக்கு முதலில் ஜாதகம் பார்ப்பது, திருமண பொருத்தம், எண் ஜோதிடம், வாஸ்து வழிகாட்டுதல் செய்து வந்தேன். தொழில் பிரச்னைகளுக்கான ஆலோசனைகள், தொழில் வெற்றி பெற செய்ய வேண்டிய ஜோதிட ரீதியான பரிகாரங்களையும் சொல்ல அதற்கும் வரவேற்பு கிடைத்தது. இதனால் ஆஸ்ட்ரோ மாஜிக் என்ற நிறுவனத்தை கோவை யில் துவங்கினேன். வேத ஜோதிடத்தில் பெற்ற அறிவை கொண்டு அறிவியல் ஜோதிடத்திலும் இறங்கினேன்.
என்ன தான் இன்று தகவல் தொழில் நுட்ப யுகமாக இருந்தாலும் கூட நாளை நமக்கு என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்வதில் இளையதலைமுறையினருக்கு ஆர்வம் உண்டு. இதை என்னை நாடி வரும் இளையதலைமுறையினர் எண்ணிக்கையை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஜோதிட ரீதியாக மாதந்தோறும் சென்று வருகிறேன். அந்தளவுக்கு அங்கு ஜோதிடத்திற்கு வரவேற்புள்ளது. ஜோதிட சேவையை பாராட்டி ஜோதிட நல்லாசிரியர் உட்பட பல விருதுகள் பெற்றது பெருமை.
என்ன கார் வாங்கலாம். எந்த நிறத்தில் வாங்கலாம் என்பது மட்டுமின்றி திருப்பதி செல்வோர் கூட வரிசையில் நிற்பதை தவிர்க்க எந்த நேரத்தில் செல்ல வேண்டும் என கேட்கின்றனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
என்னை பொறுத்தவரை இந்த வேலையை இவர் தான் பார்க்க வேண்டும் என்பதில்லை. அது இன்றைய காலகட்டத்திற்கு பொருந்தாது. எந்த வேலையையும் ஈடுபாட்டுடன் செய்தால் அந்த துறையில் சாதிக்கலாம். இதற்கு நானே உதாரணம். விரும்பிய துறையை தேர்வு செய்து அதில் முழுமூச்சாக இறங்கினால் வெற்றி பெறலாம். தயக்கத்தை கைவிட்டு தைரியத்துடன் எதையும் எதிர்கொள்ள வேண்டும் என்றார்.
வாழ்த்த 98437 96668
- எம்.ரமேஷ் பாபு