பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பஸ்; பயணிகள் 39 பேர் காயம்
பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பஸ்; பயணிகள் 39 பேர் காயம்
ADDED : மே 09, 2024 11:27 PM

திருப்புல்லாணி : ராமநாதபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கட்டுப்பாட்டை இழந்த அரசு டவுன் பஸ் பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்ததில் 39 பயணிகள் காயமடைந்தனர்.
ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரைக்கு நேற்று காலை 1ம் நம்பர் அரசு டவுன் புறப்பட்டது. பஸ்சை ஆர்.எஸ்.மடையை சேர்ந்த டிரைவர் ஆத்திமுத்து 50, ஓட்டினார். காலை 11:15 மணிக்கு திருப்புல்லாணி அருகே வலையனேந்தல் வழியாக கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலை சென்றது.
முன்னால் சென்ற டிராக்டர் வழிவிட மறுத்ததால் அதனை முந்திச் செல்ல வலது பக்கமாக பஸ் சென்ற போது நிலைதடுமாறி 7 அடி ரோட்டோர பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது.
இதில் பஸ்சில் பயணித்த திருப்புல்லாணி, கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 24 ஆண்கள், 15 பெண்கள் காயமடைந்தனர். இவர்களில் 20 பேர் கீழக்கரை மற்றும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார் தனது ஜீப்பில் காயமடைந்த பெண்களை மீட்டு சிகிச்சைக்கு ராமநாதபுரம் அனுப்பி வைத்தார். திருப்புல்லாணி போலீசார் விசாரிக்கின்றனர்.
மூன்று மணி நேரத்திற்கு பின் மேலாளர் பாலமுருகன் தலைமையில் அதிகாரிகள் பார்வையிட்டு பஸ்சை இயந்திரங்கள் உதவியுடன் மீட்டனர்.