ADDED : மே 15, 2024 12:02 AM

சென்னை:“தென்மாநிலங்களை ஒருங்கிணைத்து, சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சியாக, ஜூன் 15, 16ல் பெங்களூரில், 'தக்சின் பாரத் உத்சவ்' என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது,” என, கர்நாடக வர்த்தக மற்றும் தொழிற்சாலைக்கான கூட்டமைப்பின் தலைவர் ரமேஷ் சந்திரா லகோட்டி தெரிவித்தார்.
கர்நாடகாக, தெலுங்கானா, ஆந்திரா, தமிழகம், கேரளா ஆகிய தென் மாநிலங்களை ஒருங்கிணைத்து, சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சிகளை, கர்நாடக வர்த்தக மற்றும் தொழிற்சாலைக்கான கூட்டமைப்பு முன்னெடுத்து உள்ளது.
இது தொடர்பான ஆலோசனை கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. கர்நாடக, தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக நிர்வாகிகள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தமிழக வணிகர் சங்க பேரமைப்பு, சுற்றுலா துறை முகவர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
ஆலோசனைக்கு பின், கர்நாடக வர்த்தக மற்றும் தொழிற்சாலைகளுக்கான கூட்டமைப்பின் தலைவர் ரமேஷ் சந்திரா லகோட்டி கூறியதாவது:
கர்நாடகா, தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, லட்சத்தீவு உள்ளிட்ட தென்மாநில அரசுகளுடன் இணைந்து, சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சியாக, அடுத்த மாதம் 15, 16ம் தேதிகளில், பெங்களூரில், 'தக்சின் பாரத் உத்சவ்' என்ற நிகழ்ச்சியை நடத்த உள்ளோம்.
அதில், 1 கோடி முதல், 100 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யும் சுற்றுலா துறை சார்ந்த, சிறு, குறு தொழில் நிறுவனங்களை இணைத்து, சுற்றுலா துறை சார்ந்த தொழில்களுக்கு, அனைத்து மாநில அனுமதிகளையும் பெற உள்ளோம்.
தென் மாநிலங்களில் மலைகள், காடுகள், நீண்ட கடற்கரை, அருவிகள், நதிகள், பாரம்பரிய கட்டடங்கள், கோவில்கள், கலைகள் என, சுற்றுலா பயணியரை கவரும் அம்சங்கள் நிறைய உள்ளன.
என்றாலும், ஒரு மாநிலத்துக்கும் இன்னொரு மாநிலத்துக்குமான ஒருங்கிணைப்பு இல்லாததால், சுற்றுலா துறை வளராமல் உள்ளது.
இந்த தடையை தகர்த்து, சுற்றுலா பயணியர், தொழில் முனைவோர் பயனடையும் வகையில், பொதுத்துறைகளுக்கு சொந்தமான வெற்று நிலங்களை பெற்று, சுற்றுலா பயணியருக்கான அடிப்படை வசதிகளை செய்யவும், சுற்றுலா தலங்களுக்கான போக்குவரத்து, சாலை வசதிகளை செய்யவும் திட்டமிட்டு உள்ளோம்.
அடுத்த மாதம் நடக்கும் நிகழ்வில், நுாற்றுக்கும் மேற்பட்ட அரங்குகளில், சுற்றுலா துறை சார்ந்தோரிடம் உள்ள வசதிகள் குறித்த விளக்கங்களும், மாநிலத்தின் தனித்துவ இடங்கள்; அவை சார்ந்த உணவு வகைகளும் இடம் பெறும்.
இதில், தென் மாநில சுற்றுலா துறைகளின் தலைமை செயலர்கள் பங்கேற்பர். சுற்றுலா துறைக்கு, அரசு செய்ய வேண்டிய உதவிகள் குறித்து, அதில் விவாதிக்கப்படும். அடுத்தாண்டு, தமிழகத்தில், 'தக்சின் பாரத் உத்சவ்' நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

