புதிய குற்றவியல் சட்டங்களில் திருத்தம் செய்ய ஒருநபர் குழு
புதிய குற்றவியல் சட்டங்களில் திருத்தம் செய்ய ஒருநபர் குழு
ADDED : ஜூலை 09, 2024 04:04 AM

சென்னை : மத்திய அரசு நடைமுறைப்படுத்தி உள்ள, புதிய குற்றவியல் சட்டங்களில், மாநில அளவில் திருத்தங்கள் செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில், ஒருநபர் குழு அமைத்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்திய தண்டனை சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவை மாற்றப்பட்டு, 'பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சாக் ஷியா சட்டம்' என்ற மூன்று புதிய சட்டங்கள், இம்மாதம் முதல் தேதியில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளன.
இப்புதிய சட்டங்களில் உள்ள பிரச்னைகள் குறித்து, உள்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். 'புதிய சட்டத்தின் சில அடிப்படை பிரிவுகளில் தவறுகள் உள்ளன.
மாநில அரசுகளிடம் இருந்து, முழுமையாக கருத்துக்களை பெறாமல் இவை இயற்றப்பட்டுள்ளன. இந்த சட்டங்களை ஒத்திவைக்க வேண்டும்' என, கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், தமிழக அரசு சார்பில், இப்புதிய சட்டங்களில், என்னென்ன திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்பது குறித்த ஆலோசனை கூட்டம், முதல்வர் தலைமையில், நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது.
அமைச்சர் துரைமுருகன், எம்.பி.,க்கள் வில்சன், என்.ஆர்.இளங்கோ, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலர் அமுதா, டி.ஜி.பி., சங்கர் ஜிவால், தலைமை குற்றவியல் அரசு வழக்கறிஞர் அசன்முகமது ஜின்னா, சட்டத்துறை செயலர் ஜார்ஜ் அலெக்சாண்டர் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தின் முடிவில், புதிய சட்டங்களில் மாநில அளவில் பெயர் மாற்றம் உட்பட, என்னென்ன திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்பதை ஆராய்ந்து, அரசுக்கு பரிந்துரை செய்ய, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழு அமைத்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இக்குழு புதிய சட்டங்கள் குறித்து தெளிவாக ஆராய்ந்து, மாநில அளவில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் உள்ளிட்ட, பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து, என்னென்ன திருத்தங்களைக் கொண்டு வரலாம் என்பது குறித்த அறிக்கையை, ஒரு மாதத்திற்குள் அரசுக்கு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

