ADDED : ஜூன் 16, 2024 02:09 AM
பிளாஸ்டிக்கை உபயோகிக்கிறோம், துாக்கி எறிகிறோம் எந்த கவலையும் இல்லாமல். வீடு சுத்தமாக வேண்டும், உலகம் அசுத்தம், ஆனாலும் பரவாயில்லை என்ற எண்ணம் தான் காரணம். உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 13 லட்சம் கோடி கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவற்றில் பெரும்பாலும் உபயோகப்படுத்தப்பட்டு துாக்கி எறியப்படுகிறது.
இந்த கண்ணாடி, பிளாஸ்டிக் பாட்டில்கள் தவிர்த்து எளிதில் மக்கக்கூடிய பொருள்களில் இருந்து திரவங்களை பேக்கேஜிங் செய்ய வேறு தீர்வே இல்லையா என்று பலரும் நினைத்து கொண்டிருக்கும் போது, 'ஒரு புல்ப்ளக்ஸ்' (pulplex) என்ற ஒரு 'ஸ்டார்ட் அப் கம்பெனி', மரக்கூழிலில் இருந்து தீர்வு கண்டிருக்கிறது.
இவர்கள் தயாரிக்கும் பாட்டில்கள் புதுப்பிக்கத்தக்க 'PEFC' அங்கீகாரம் பெற்ற மற்றும் 'FSC' சான்றளிக்கப்பட்ட நிலையான ஆதார மரக்கூழில் இருந்து தயாரிக்கப்படுகிறது, இவை முற்றிலும் PET / HDPE இல்லாதது.
குறைந்த கார்பன் தடம் (கண்ணாடியை விட 90 சதவீதம் குறைவாகவும், PET-ஐ விட 30 சதவீதம் குறைவாகவும்) மற்றும் இயற்கை பொருட்களால் உற்பத்தி செய்யப்படுவதால், இந்த பாட்டில்கள் இயற்கை சூழலில் எளிதில் சிதைந்து விடும்.
சூடான பொருட்களையும் தாங்கும் திறன் கொண்டதாக இருக்கும். 'பல்பெக்ஸ்' பாட்டில்கள் தற்போது ஸ்டில் திரவங்களுக்கு மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளன. கார்பனேற்றப்பட்ட பானங்களுக்கான பாட்டில்களை இந்த வடிவமைப்பதில் இந்த ஸ்டார்ட் அப் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
காகித பாட்டில் ஏன்
கண்ணாடி சிறந்தது மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடியது தானே என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். கண்ணாடி பாட்டில்கள் அதிக ஆற்றலைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகின்றன (அவை CO2 உமிழ்வை உருவாக்கலாம்) மற்றும் மறுசுழற்சி செய்யும் கண்ணாடியும் அதிக ஆற்றலை எடுக்கும்.
பல கண்ணாடி பாட்டில்கள் மறுசுழற்சி செய்யப்படுவதில்லை. மறுசுழற்சி செய்யப்படாத கண்ணாடி பாட்டில்கள் இயற்கை சூழலில் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் நீடிக்கும் மற்றும் அவை உடைந்தால் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஆபத்தை உருவாக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
உலகின் அதிகம் விரும்பப்படும் கெட்ச்அப் மற்றும் கான்டிமென்ட் தயாரிப்பாளரான ஹெய்ன்ஸ், 100 சதவீதம் நிலையான மரக் கூழிலிருந்து தயாரிக்கப்பட்ட காகித அடிப்படையிலான, புதுப்பிக்கத்தக்க மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய பாட்டிலை உருவாக்க புல்பெக்ஸுடன் (Pulpex) இணைந்து மார்க்கெட்டில் கொண்டுவர ஆயத்தமாகிறது.
விவரங்களுக்கு இ-மெயில்: sethuraman.sathappan@gmail.com
அலைபேசி: 98204-51259
இணையதளம் www.startupandbusinessnews.com
- சேதுராமன் சாத்தப்பன் -

