11ம் வகுப்பு பொது தேர்வில் முழு தேர்ச்சி பெற்று 241 அரசு பள்ளிகள் சாதனை
11ம் வகுப்பு பொது தேர்வில் முழு தேர்ச்சி பெற்று 241 அரசு பள்ளிகள் சாதனை
UPDATED : மே 15, 2024 02:04 AM
ADDED : மே 14, 2024 11:56 PM

சென்னை:பிளஸ் 1 பொதுத்தேர்வில், 91.17 சதவீதம் மாணவ - மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவியர் அதிக தேர்ச்சி பெற்று உள்ளனர். 241 அரசு பள்ளிகள் உட்பட, 1,964 பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
தமிழகத்தில், 8 லட்சத்து 11,172 பேர், பிளஸ் 1 தேர்வு எழுதினர். இவர்களில், 7 லட்சத்து 39,539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 91.17 சதவீதம்.
இதில், மாணவியர் தேர்ச்சி விகிதம் 94.69; மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 87.26; கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் 0.24 சதவீதம் அதிகரித்துள்ளது.
பள்ளிகள்
மொத்தம் 7,534 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில், 241 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உட்பட, 1,964 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளன.
அரசு பள்ளிகள் 85.75; அரசு உதவி பெறும் பள்ளிகள் 92.36; தனியார் சுயநிதி பள்ளிகள் 98.09; இருபாலர் பள்ளிகள் 91.61; பெண்கள் பள்ளிகள் 94.46; ஆண்கள் பள்ளிகள் 81.37 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
![]() |
பாடங்கள்
இயற்பியலில் 97.23; வேதியியலில் 96.20; உயிரியலில் 98.25; கணிதத்தில் 97.21; தாவரவியலில் 91.88; விலங்கியலில் 96.40; கணினி அறிவியலில் 99.39; வணிகவியலில் 92.45; கணக்குப் பதிவியலில் 95.22 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
அதிகம் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில், கோவை முதலிடம் பெற்றுள்ளது. இம்மாவட்டத்தில் 96.02 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதற்கு அடுத்தபடியாக, ஈரோட்டில் 95.56; திருப்பூரில் 95.23 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசு பள்ளிகளில், அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 92.86 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதற்கு அடுத்தபடியாக அரியலுாரில் 92.59; திருப்பூரில் 92.06 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறைந்தபட்சமாக வேலுாரில், 81.40 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நுாற்றுக்கு நுாறு
பிளஸ் 1 தேர்வில், 8,418 மாணவர்கள் ஏதேனும் ஒரு பாடத்தில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அதிகபட்சமாக கணினி அறிவியலில் 3,432; கணிதத்தில் 779; பொருளியலில் 741; இயற்பியலில் 696; வணிகவியலில் 620; வேதியியலில் 493; கணக்குப் பதிவியலில் 415; வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியலில் 293; கணினிப் பயன்பாடுகளில் 288; உயிரியலில் 171; விலங்கியலில் 29; ஆங்கிலத்தில் 13; தமிழில் 8; தாவரவியலில் 2 பேர் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மொழிப்பாடத்தில் தோல்வி
பிளஸ் 1 பொதுத்தேர்வில், ஆங்கிலம் தவிர்த்து, தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களில், 34,737 பேர் தோல்வி அடைந்து உள்ளனர். மொத்தம் 8.11 லட்சம் பேர், தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடத்தேர்வு எழுதினர்.
இவர்களில், 7.76 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 95.72 சதவீதம்.


