மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் தடுக்க உதவும்படி அரசிடம் கோரிக்கை
மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் தடுக்க உதவும்படி அரசிடம் கோரிக்கை
ADDED : ஜூலை 04, 2024 09:54 PM
சென்னை:'மக்காச்சோள சாகுபடிக்கு பெரும் சவாலாக உள்ள படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த, அரசு உதவ வேண்டும்' என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
நாமக்கல், ஈரோடு, சேலம், திண்டுக்கல், திருப்பூர், பெரம்பலுார், கடலுார், கள்ளக்குறிச்சி, திருச்சி என, பல்வேறு மாவட்டங்களில், மக்காச்சோள சாகுபடி, 8.64 லட்சம் ஏக்கரில் நடந்து வருகிறது.
எதிர்பார்ப்பு
மாநிலத்தின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு உற்பத்தி இல்லை. வரும் காலங்களில், மக்காச்சோளத்தின் தேவை இரண்டு மடங்கு அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.எனவே, இதற்கான சிறப்பு திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, 18 மாவட்டங்களில், 30 கோடி ரூபாய் நிதியில், திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ், வீரிய ஒட்டு ரக மக்காச்சோள விதைகள், திரவ உயிர் உரங்கள், இயற்கை உரம் உள்ளிட்ட, 50,000 தொகுப்புகள் வழங்கப்பட உள்ளன.
மக்காச்சோள பயிர்களில் படைப்புழு உள்ளிட்ட பூச்சிகளின் தாக்குதல் அதிகம் உள்ளது.
கவலை
தொடர்ச்சியாக மருந்து தெளித்து, கண்காணிக்க வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் உள்ளனர். இதனால், சாகுபடி செலவு அதிகரிக்கிறது; விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்படுகிறது. தற்போது, படைப்புழுவின் தாக்கம், மக்காச்சோளம் சாகுபடி செய்யும் மாவட்டங்களில் தலைதுாக்க துவங்கியுள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில், மக்காச்சோள பயிர்களை அமெரிக்கன் படைப்புழுக்கள் கபளீகரம் செய்தன. உடன், அவற்றை சாகுபடி செய்த விவசாயிகள் கவலையில் ஆழ்ந்தனர்.
அப்போது, அரசு தரப்பில் 45 கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தொடர்ச்சியாக படைப்புழுக்களை ஒழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
வலியுறுத்தல்
அதேபோன்று, மக்காச்சோள பயிர்களை தாக்கும் படைப்புழுக்கள் அழிப்பதற்கு அரசு உதவ வேண்டும் என, வேளாண் துறையிடம் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மழை பெய்தால், படைப்புழுக்கள் படையெடுப்பு அதிகரிக்கும்; அதன்பின் படிப்படியாக குறையும். இவற்றை அழிப்பதற்கு தொடர்ச்சியான திட்டம் வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குனர்களிடம் பெறப்பட்ட தகவல்கள், அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.