டீசல் விலைக்கு ஏற்ப பஸ் கட்டணத்தை மாற்றியமைக்க வருகிறது தனி ஆணையம்
டீசல் விலைக்கு ஏற்ப பஸ் கட்டணத்தை மாற்றியமைக்க வருகிறது தனி ஆணையம்
ADDED : ஆக 13, 2024 02:04 AM

சென்னை: எரிபொருள் செலவுக்கு ஏற்ப பஸ் கட்டணத்தை மாற்றி அமைக்க, தனி ஆணையம் அமைக்கும் பணியை போக்குவரத்து துறை துவக்கி உள்ளது.
தமிழகத்தில் உள்ள எட்டு அரசு போக்குவரத்து கழகங்கள் வாயிலாக, தினமும் 20,300க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. சராசரியாக, 1.76 கோடி பேர் பயணம் செய்கின்றனர். அரசு பஸ்களை இயக்க தினமும், 17 லட்சம் லிட்டர் டீசல் தேவை.
டீசல் விலை, சுங்கச்சாவடி கட்டணம் அடிக்கடி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மாதாந்திர கூடுதல் செலவு அதிகரித்து வருகிறது. 2023 - 24ம் நிதியாண்டில் மட்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு, 6,317 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, அரசு புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, எரிபொருள் செலவுக்கு ஏற்ப பஸ் கட்டணத்தை மாற்றியமைக்க, தனி ஆணையம் அமைக்கும் பணியை தமிழக போக்குவரத்து துறை துவக்கி உள்ளது.
இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது:
அரசு போக்குவரத்து கழகங்களின் வருவாய், செலவு மற்றும் வருவாயை பெருக்குவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்த வல்லுனர்கள் குழு, அரசிடம் புள்ளி விபரங்களை அளித்துள்ளது.
டீசல் மற்றும் உதிரிபாகங்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. போக்குவரத்து பணியாளர்களுக்கு சம்பளத்தையும் உயர்த்த வேண்டி உள்ளது.
கொரோனா ஊரடங்குக்கு பின், அரசு போக்குவரத்து கழகங்களின் நிதிநிலை மோசமாக இருக்கிறது. சில போக்குவரத்து கழகங்களில், பணியாளர்களுக்கு மாத சம்பளம் வழங்க, தமிழக அரசின் நிதியை எதிர்பார்க்க வேண்டி உள்ளது.
ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களை ஒப்பிடுகையில், கிலோ மீட்டருக்கு எட்டு முதல் 10 காசு வரை தமிழகத்தில் பஸ் கட்டணம் குறைவு.
எனவே, மற்ற மாநிலங்களில் இருப்பது போல, கட்டணத்தை எரிபொருள் விலை நிலவரத்திற்கு ஏற்ப உயர்த்துவது குறித்து முடிவெடுக்க, தனி ஆணையம் அமைக்க, வல்லுனர் குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

