ADDED : ஜூலை 02, 2024 02:48 AM
சென்னை : அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் நேற்று துவங்கிய நிலையில், பல இடங்களில் ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
தமிழக பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும், தொடக்க பள்ளிகளில் பணியாற்றும், 1.20 லட்சம் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் நேற்று துவங்கியது. இதில், நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நேற்று அந்தந்த ஒன்றியத்திற்குள் இடமாறுதல் வழங்க, பட்டியல் தயார் செய்யப்பட்டு, மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் கவுன்சிலிங் நடந்தது.
இதில், பல இடங்களில் டிட்டோஜாக் கூட்டமைப்பின் ஆசிரியர்கள் முற்றுகை மற்றும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். திருச்சி மாவட்டம் முசிறியில் மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் ஆசிரியர்கள் நடத்திய முற்றுகை போராட்டத்தால், இடமாறுதல் கவுன்சிலிங் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:
கவுன்சிலிங்கில் பணி மூப்பு சரியாக பின்பற்றப்படவில்லை. மாவட்ட கல்வி அதிகாரிகள் பல இடங்களில், முன்கூட்டியே சில ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்க, இடங்களை மறைத்து, 'பிளாக்' செய்துள்ளனர். அதனால், காலியிடங்கள் இருந்தும் ஆசிரியர் கவுன்சிலிங்கில், அந்த இடங்கள் கிடைக்கவில்லை. எனவே, வெளிப்படையாக கவுன்சிலிங்கை நடத்தாவிட்டால், சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், கவுன்சிலிங்குக்கு முன் நிரப்பிய இடங்களின் இடமாறுதலை உடனே ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.