இடைப்பாடியில் புலி உலா? கேமரா பொருத்தி கண்காணிப்பு
இடைப்பாடியில் புலி உலா? கேமரா பொருத்தி கண்காணிப்பு
ADDED : ஜூன் 09, 2024 03:11 AM
இடைப்பாடி: சேலம் மாவட்டம், இடைப்பாடி தாலுகா பக்கநாடு, ஆடையூர், ஆனைப்பள்ளம், செங்குட்டப்பட்டி, புளியம்பட்டி, மதுரகாளியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் அதிக மரங்கள், செடிகள் கொண்ட வனப்பகுதி உள்ளது. இங்கு ஏராளமானோர் விவசாயம் செய்கின்றனர். ஆனைப்பள்ளம் பகுதியில் விவசாயி வீரப்பன், 51, குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். கடந்த, 6 இரவில், வீரப்பனின் ஆடு ஒன்றை மர்ம விலங்கு கொன்று இழுத்து சென்றுள்ளது.
நேற்று முன்தினம் காலை, வீரப்பன் ஆட்டை தேடியபோது அதன் தலை, கால், வயிற்று பகுதிகள் பல இடங்களிலும், கள்ளி செடியின் மேலேயும் கிடந்துள்ளன. ஆட்டை இழுத்து சென்ற விலங்கின் காலடி தடம், புலியின் காலடி தடத்துடன் ஒத்து போவதால், அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
இதையடுத்து, மேட்டூர் வனச்சரக வனகாப்பாளர் ஜீவானந்தம் தலைமையில் வனக்காவலர்கள் பக்கநாடு, ஆடையூர், ஆனைப்பள்ளம் வனப்பகுதிகளில் நேற்று ஆய்வு செய்தனர். பல இடங்களில் கேமரா பொருத்தி, விலங்கு நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகின்றனர்.

