வங்கி ஏ.டி.எம்.,மில் கள்ளநோட்டு செலுத்தியவரிடம் விசாரணை
வங்கி ஏ.டி.எம்.,மில் கள்ளநோட்டு செலுத்தியவரிடம் விசாரணை
ADDED : மே 22, 2024 05:42 AM
பெரியகுளம் : தேனி மாவட்டம் பெரியகுளம் இந்தியன் வங்கி ஏ.டி.எம்., மில் கள்ளநோட்டை செலுத்திய மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் அலுவலக உதவியாளர் விக்னேஷ் மூர்த்தியிடம் 31, போலீசார் விசாரித்து வருகின்றனர். உடந்தையாக இருந்த பெண் வக்கீல் ஜீவஜோதி 38, கைது செய்யப்பட்டார்.
தேவாரத்தைச் சேர்ந்த விக்னேஷ் மூர்த்தி தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற அலுவலக உதவியாளராக உள்ளார். பெரியகுளம் ஸ்டேட் பாங்க் காலனி வக்கீல் ஜீவஜோதியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. 'ரூ.60 ஆயிரம் கொடுத்தால் ரூ.10 லட்சம் கிடைக்கும்,' என விக்னேஷ் மூர்த்தியிடம் கூறி, மே 12 திண்டுக்கலில் இருந்து ரயில் மூலம் பெங்களூருக்கு ஜீவஜோதி அழைத்து சென்றார்.
பெங்களூரு லாட்ஜில் மே 13 வெளி மாநிலத்தை சேர்ந்த ஒருவர் வந்துள்ளார். விக்னேஷ் மூர்த்தி தான் கொண்டு வந்திருந்த ரூ.44,500 யை கொடுத்தார். வெளிமாநில நபர் ஒரு பெட்டியில் பவுடர்களை கொட்டி அதில் விக்னேஷ் மூர்த்தி கொடுத்த பணத்தை குலுக்கி சீலிட்டார். பெட்டியை 10 நாட்கள் கழித்து திறந்தால் ரூ.10 லட்சம் கிடைக்கும் எனக்கூறி அனுப்பினார். இதையடுத்து இருவரும் பெரியகுளம் திரும்பினர்.
நேற்று காலை விக்னேஷ் மூர்த்தி பெட்டியை திறந்து பார்த்த போது ரூ.38,000 மட்டும் இருந்தது. பணம் குறைவாக இருக்கிறது என ஜீவஜோதியிடம் கேட்டபோது தனக்கு தெரியாது என்றார். விக்னேஷ் மூர்த்தி 76 எண்ணிக்கை கொண்ட ரூ.500 நோட்டு ரூ.38 ஆயிரம் பணத்தை பெரியகுளம் இந்தியன் வங்கி 'ஏ.டி.எம்.,மில் நேற்று மதியம் 12:30 மணியளவில் செலுத்தும்போது, ரூ.18 ஆயிரம் மட்டும் உள்ளே சென்ற நிலையில் 'மிஷின் கவுன்ட்' செய்வதை நிறுத்தியது.
மீதமுள்ள ரூ.20 ஆயிரம் பணத்தை வங்கி மேலாளர் கவுதமிடம் கொடுத்து மிஷின் நின்றதாக தெரிவித்தார். அவை கள்ள நோட்டு (கலர் ஜெராக்ஸ்) என கண்டறிந்த வங்கி மேலாளர் இதுகுறித்து வடகரை எஸ்.ஐ., பிரேம்ஆனந்திடம் புகார் கொடுத்தார். வக்கீல் ஜீவஜோதியை கைது செய்து, விக்னேஷ் மூர்த்தியிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

