சேலத்தில் உலகத்தரம் வாய்ந்த நுாலகம் பட்ஜெட்டில் அறிவிப்பு என முதல்வர் பதில்
சேலத்தில் உலகத்தரம் வாய்ந்த நுாலகம் பட்ஜெட்டில் அறிவிப்பு என முதல்வர் பதில்
ADDED : ஜூன் 28, 2024 12:02 AM
சென்னை:சேலத்தில் உலகத்தரம் வாய்ந்த நுாலகம் அமைக்க வேண்டும் என, பா.ம.க., - எம்.எல்.ஏ., அருள் கோரிக்கை விடுத்ததும், அடுத்த நிதி அறிக்கையில் அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என, முதல்வர் பதில் அளித்தார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - ஈஸ்வரன்: விமான நிலையத்தை கிருஷ்ணகிரி - ஓசூர் இடையே அமைக்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் - ராமச்சந்திரன்: ஓசூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. முதல்வர் அறிவிப்பின் வழியே, தற்போது கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
பா.ஜ., - காந்தி: ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். அதன் அருகில் பெங்களூரு பன்னாட்டு விமான நிலையம் உள்ளது.
ஒரு விமான நிலையத்திற்கும், மற்றொரு விமான நிலையத்திற்கும் இடையில், எவ்வளவு துாரம் இருக்க வேண்டும் என்ற விதிகளை புரிந்து, அதன் அடிப்படையில் விமான நிலையம் அமைப்பதை, பா.ஜ., வரவேற்கிறது.
பா.ம.க., - அருள்: ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்படுவதை, பா.ம.க., வரவேற்கிறது. ஓசூருக்கும், கிருஷ்ணகிரிக்கும் இடையே, அந்த விமான நிலையத்தை அமைக்க வேண்டும்.
சேலத்தில் ஒரு விமான நிலையம் உள்ளது. அங்கு ஒரு விமானம் மட்டுமே வந்து செல்கிறது. அந்த விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். சென்னை, கோவை, திருச்சியில் நுாலகம் அமைப்பது போல, சேலத்திலும் உலகத்தரம் வாய்ந்த நுாலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின்: சேலத்தில் உலகத்தரம் வாய்ந்த நுாலகம் தொடர்பான அறிவிப்பை, அடுத்த நிதி அறிக்கையில் எதிர்பார்க்கலாம்.
அருள்: முதல்வருக்கு நன்றி.
அமைச்சர் ராஜா: கடந்த ஆண்டு 80,000 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்துள்ளோம். இந்த ஆண்டு நிச்சயமாக 1 லட்சம் கோடி ரூபாய்க்கான ஏற்றுமதியை, தமிழகம் செய்யும். அதை நோக்கி வருவதற்காக, விமான நிலைய விரிவாக்கம் நடக்கிறது.
ஓசூர் விமான நிலைய அறிவிப்புக்கு, தொழில் துறை சார்பில் முதல்வருக்கு நன்றி. திருச்சியை தொடர்ந்து தஞ்சாவூருக்கு நுாலகத்தை முதல்வர் அறிவிப்பார் என்று நம்புகிறேன்.
சபாநாயகர் அப்பாவு: சென்னை, மதுரை, கோவை, திருச்சி மாவட்டத்திற்கு நுாலகம் தந்தது போல, சேலத்திற்கு தருவதாக முதல்வர் கூறியுள்ளார். அதேபோல், திருநெல்வேலிக்கும் வரும் என, பட்ஜெட்டை எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு, விவாதம் நடந்தது.
முதல்வர் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து, மனிதநேய மக்கள் கட்சி அப்துல் சமது, ம.தி.மு.க., சின்னப்பா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நாகை மாலி, விடுதலை சிறுத்தைகள் கட்சி எஸ்.எஸ்.பாலாஜி, காங்கிரஸ் தாரகை கத்பட் ஆகியோர் பேசினர்.

