ஏ.டி.எம்., கார்டை மாற்றி கொடுத்து மோசடி செய்த வாலிபர் கைது
ஏ.டி.எம்., கார்டை மாற்றி கொடுத்து மோசடி செய்த வாலிபர் கைது
ADDED : ஜூலை 11, 2024 05:37 AM
கள்ளக்குறிச்சி : முதியவரிடம் ஏ.டி.எம்., கார்டை மாற்றிக்கொடுத்து பணம் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
திருக்கோவிலுார் அடுத்த தனகனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி,76; இவர் கடந்த ஏப்.10 ம் தேதி தனது வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க திருக்கோவிலுார் பஸ் நிலையம் அருகில் உள்ள ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்க தெரியாமல் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபரிடம், ராமசாமி தனது ஏ.டி.எம்., கார்டை கொடுத்த, ரகசிய நம்பரை தெரிவித்து பணம் எடுத்து தருமாறு கூறினார். அந்த நபர், பணம் எடுப்பது போல் பாவ்லா காட்டிவிட்ட பணம் வரவில்லை எனக்கூறி ஏ.டி.எம்., கார்டை கொடுத்துவிட்டு சென்றார்.
அதன்பிறகு ராமசாமி பல ஏ.டி.எம்., மையங்களுக்கு சென்றும் பணம் எடுக்க முடியவில்லை. வங்கிக்கு சென்று விசாரித்தபோது, அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.15 ஆயிரத்து 523 பலமுறை எடுத்திருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து ராமசாமி அளித்த புகாரின்பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்த, ஏ.டி.எம்., மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் கிடைத்த தகவலின் பேரில் ராமசாமியிடம் மோசடி செய்த விழுப்புரம் அடுத்த சின்னக்குப்பத்தை சேர்ந்த பக்கிரி மகன் ராஜாராமன்,32; என்பவரை நேற்று கைது செய்தனர்.

