கோடையை சமாளிக்க மோர், லஸ்ஸி உற்பத்தியை அதிகரித்தது ஆவின்
கோடையை சமாளிக்க மோர், லஸ்ஸி உற்பத்தியை அதிகரித்தது ஆவின்
UPDATED : ஏப் 27, 2024 12:40 PM
ADDED : ஏப் 27, 2024 01:09 AM

சென்னை:கோடையை சமாளிப்பதற்காக மோர், தயிர், லஸ்ஸி உள்ளிட்ட பால் பொருட்களின் உற்பத்தியை, 20 சதவீத அளவிற்கு ஆவின் அதிகரித்து உள்ளது.
ஆவின் நிறுவனம் வாயிலாக பால் மட்டுமின்றி, வெண்ணெய், நெய், தயிர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட 280க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை, ஆவின் பாலகங்கள் மட்டுமின்றி, தனியார் கடைகளிலும், சூப்பர் மார்க்கெட்டுகளிலும், தற்போது விற்பனைக்கு கிடைக்கிறது.
பால் பொருட்கள் விற்பனை வாயிலாக ஆவினுக்கு மாதந்தோறும், 60 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைத்து வருகிறது.
கோடை வெயில் காரணமாக சென்னை, சேலம், வேலுார் உட்பட பல்வேறு மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
மோர், பழரசம், லஸ்ஸி உள்ளிட்ட நீராகாரங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு ஆவினில், தயிர், மோர், லஸ்ஸி, சாக்லோ லஸ்ஸி, மேங்கோ லஸ்ஸி, சாக்லோ லஸ்ஸி, மில்க் ஷேக், யோகர்ட் உள்ளிட்டவற்றின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆவின் நிர்வாக இயக்குனர் வினீத் கூறியதாவது:
கோடைக்காலத்தில் ஆவின் பால் பொருட்கள் விற்பனை அதிகரிப்பது வழக்கம். நடப்பாண்டு வெப்பம் காரணமாக, குளிர்ச்சியான ஆவின் பொருட்களை மக்கள் நாடிச் செல்கின்றனர். இதை கருத்தில் கொண்டு பால் பொருட்களின் உற்பத்தி, 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் குல்பி வகைகள், ஐஸ்கிரீம் வகைகள் முழுவீச்சில் உற்பத்தி செய்யப்பட்டு, உடனுக்குடன் பல மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. சென்னையில் விற்பனை இரண்டு மடங்கு அதிகரித்துஉள்ளது. பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு, அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

