8 பூத்தில் மறு ஓட்டுப்பதிவு ஏ.சி.சண்முகம் கோரிக்கை
8 பூத்தில் மறு ஓட்டுப்பதிவு ஏ.சி.சண்முகம் கோரிக்கை
ADDED : ஏப் 23, 2024 01:01 AM
சென்னை: 'வேலுார் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, அணைக்கட்டு சட்டசபை தொகுதியில், எட்டு ஓட்டுச்சாவடிகளில் மறு ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும்' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரிக்கு, வேலுார் பா.ஜ., வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மனு அனுப்பி உள்ளார்.
மனுவில் கூறியிருப்பதாவது:
வேலுார் லோக்சபா தொகுதியில், அணைக்கட்டு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, பீஞ்சமந்தை, தெண்டூர், தொங்குமலை, பேலாம்பட்டு, ஜார்தான் கொல்லை ஓட்டுச்சாவடி எண் 142 முதல் 149 வரை, எட்டு ஓட்டுச்சாவடிகள் தவிர்த்து, மற்ற ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது.
கடந்த 18ம் தேதிக்கு முன்பாக, மாவட்ட தேர்தல் அலுவலரிடம், மலைப் பகுதியில் உள்ள ஐந்து கிராமங்களில், தி.மு.க.,வினர் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளனர் என தெரிவித்திருந்தேன். ஏனெனில், அப்பகுதி மக்களை வேட்பாளர்கள் சந்திக்க அனுமதிக்கவில்லை.
இவ்விபரத்தை கடிதம் வழியாகவும், மொபைல் போன் வழியாகவும் தெரிவித்திருந்தேன். ஓட்டுப்பதிவு அன்று, அந்த எட்டு ஓட்டுச்சாவடிகளிலும், தி.மு.க., வேட்பாளரின் ஏஜன்ட்கள் தவிர, வேறு வேட்பாளர்களின் ஏஜன்ட்களை அனுமதிக்கவில்லை.
அங்கு முறையாக ஓட்டுப்பதிவு நடக்கவில்லை. எனவே, அந்த எட்டு ஓட்டுச்சாவடிகளிலும் மறு ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

