ராமநாதபுரத்தில் முன்னாள் முதல்வர் உட்பட 6 பன்னீர்செல்வங்களின் வேட்பு மனு ஏற்பு
ராமநாதபுரத்தில் முன்னாள் முதல்வர் உட்பட 6 பன்னீர்செல்வங்களின் வேட்பு மனு ஏற்பு
ADDED : மார் 28, 2024 11:56 PM
ராமநாதபுரம்:ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அதே பெயரில் தாக்கல் செய்த மேலும் 5 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. இதனால் ஒரே பெயரில் 6 பேர் போட்டியிட உள்ளனர்.
ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ., அ.ம.மு.க., கூட்டணி ஆதரவில் அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற பெயரில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் 4 பேரும், எம். பன்னீர்செல்வம் என ஒருவரும் மனுதாக்கல் செய்தனர்.
நேற்று நடந்த வேட்பு மனு பரிசீலனையில் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் உட்பட 6 பன்னீர் செல்வங்களின்மனுக்களும் ஏற்கப்பட்டன. நாளை (மார்ச் 30ல்) வேட்பு மனு வாபஸ் நடக்கிறது. அதன் பிறகு ராமநாதபுரம் தொகுதியில் எத்தனை பன்னீர்செல்வங்கள் போட்டியிட உள்ளனர், அவர்களுக்குரிய சின்னங்கள் எவை எனத்தெரிய வரும்.
மேலும் அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயபெருமாள், தி.மு.க., கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்டாளர் நவாஸ்கனி, நாம்தமிழர் கட்சி வேட்பாளர் சந்திரபிரபா மனுக்களும் ஏற்கப்பட்டன.
குழப்பம் ஏற்பட வாய்ப்பு இல்லை
முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்தை வீழ்த்துவதற்காக அவரது பெயரில் உள்ள நபர்களை தேடிப்பிடித்து அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., கூட்டணி கட்சிகள் 5 பேரை களமிறக்கி உள்ளதாக அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவினர் குற்றம் சாட்டுகின்றனர்.
அதே சமயம் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் புகைப்படத்துடன், தமிழ், ஆங்கிலத்தில் பெயர் இடம் பெறும் என்பதால் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஓட்டு வங்கிக்கு பாதிப்பு வராது என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

