தற்செயல் விடுப்பு போராட்டம் ஆர்.டி.ஓ.,க்களில் பணிகள் பாதிப்பு
தற்செயல் விடுப்பு போராட்டம் ஆர்.டி.ஓ.,க்களில் பணிகள் பாதிப்பு
ADDED : ஏப் 25, 2024 01:47 AM

சென்னை:வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நியமனத்தில், தொழில்நுட்பம் அல்லாத பணியாளர்கள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து, அமைச்சுப் பணியாளர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வட்டார போக்குவரத்து அதிகாரிகள் காலி பணியிடங்களை நிரப்பும்போது, தொழில்நுட்ப பிரிவு அலுவலர்களுக்கு 80 சதவீதமும், தொழில்நுட்பம் அல்லாத பிரிவினருக்கு 20 சதவீதமும் வழங்கப்படும். இதில், தற்போது மாற்றம் செய்யப்பட்டு, 100 சதவீதமும் தொழில்நுட்ப பிரிவினருக்கே வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த முடிவை கைவிட கோரி, நேற்று தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன.
இதுகுறித்து, தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிப்பு தலைவர் விஜயகுருசாமி, பொதுசெயலர் கோபிராஜன் ஆகியோர் நேற்று கூறியதாவது:
போக்குவரத்து துறை சோதனை சாவடிகளில், தொழில்நுட்பம் அல்லாத பணியிடங்கள் உள்ள. இந்த பணியிடங்கள் அனைத்தும் தொழில்நுட்ப பிரிவினருக்கே வழங்க, போக்குவரத்து ஆணையர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இது, அமைச்சுப் பணியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதை கண்டித்து நடந்த, ஒருநாள் விடுப்பு போராட்டத்தில், 90 சதவீத அமைச்சுப் பணியாளர்கள் பங்கேற்றனர். எங்களின் கோரிக்கைகள் குறித்து, நாளை பேச்சு நடத்த, போக்குவரத்து ஆணையர் அழைப்பு விடுத்துள்ளார். இதில், நாங்கள் பங்கேற்க உள்ளோம். இதில் தீர்வு ஏற்படாவிட்டால், வரும் 30ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
***

