அவரவர் துறைகளில் சாதியுங்கள்: இளசுகளுக்கு இளையராஜா அறிவுரை
அவரவர் துறைகளில் சாதியுங்கள்: இளசுகளுக்கு இளையராஜா அறிவுரை
ADDED : மார் 11, 2025 12:54 AM

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா எழுதிய சிம்பொனிக்கு, 'வேலியன்ட்' என பெயரிடப்பட்டது. இதை அரங்கேற்ற, கடந்த 6ம் தேதி லண்டன் சென்றார். அங்குள்ள 'ஈவென்டிம் அப்போலோ' அரங்கில், சில நாட்களுக்கு முன் சிம்பொனி அரங்கேற்றப்பட்டது.
இதன் வாயிலாக, சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார்.
சென்னை விமான நிலையத்திற்கு நேற்று காலை வந்த அவருக்கு, ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக அரசு சார்பில், அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அதன்பின், இளையராஜா அளித்த பேட்டி:
இசை குறிப்பை எழுதி விடலாம். எழுதியதை குழு வாசித்து விடலாம். ஆனால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் வாசித்தால் எப்படி இருக்கும்; நாம் எல்லாரும் பேசுகிற மாதிரி ஒன்றும் புரியாதது போல இருக்கும்.
சிம்பொனி அரங்கேற்றத்தின் போது, மூச்சு விடும் சப்தம் கூட கேட்காது. எல்லாருடைய கவனமும், இசையின் மீது தான் இருக்கும்.
ஒரு ஸ்வரத்தை கைகாட்டி வாசிக்கும் போது, எல்லாருடைய கவனமும் இசை குறிப்பின் மீது இருக்கும். இதை பார்வையாளர்கள் ரசித்து பார்த்தனர்.
'வெஸ்டர்ன் மியூசிக்கல்' சிம்பொனியின் நான்கு நிலைகளையும் வாசித்து முடிக்கும் வரை, யாரும் கைதட்ட மாட்டார்கள்; அது, விதிமுறை. ஆனால், நம் ரசிகர்கள், அங்கு முதல் நிகழ்வு முடிந்ததும் கை தட்டி உற்சாகப்படுத்தினர்.
இது, வாசிப்பவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. இசை வல்லுநர்களால் பாராட்டப்பட்ட சிம்பொனி, தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் நடந்தது. அதற்கு இறைவனின் அருள் தான் காரணம்.
முதல்வர் ஸ்டாலின், அரசு மரியாதையோடு என்னை வரவேற்றிருப்பது நெஞ்சை நெகிழ வைத்துள்ளது. தமிழக மக்கள் அனைவரும் என்னை வாழ்த்திக் கொண்டிருப்பது, வரவேற்பது, மிகவும் பெருமையாக உள்ளது.
இந்த சிம்பொனி நிகழ்ச்சி இசையை, யாரும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கேட்கக்கூடாது; நேரில் உணர வேண்டும். இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கேட்டால், வாத்தியங்களின் துல்லிய தன்மையை உணர முடியாது. இது போன்ற நிகழ்ச்சி, நம் மண்ணிலும் நடக்கும்; அதுவரை காத்திருப்போம்.
சிம்பொனி இசையை, 13 நாடுகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. துபாய், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளிலும் அரங்கேற உள்ளது. இந்த இசை உலகெங்கும் எடுத்து செல்லப்படும்.
இசை ரசிகர்கள், என்னை இசை தெய்வம் என்று அழைக்கின்றனர். நான் சாதாரண மனிதன். இளம் வயதில் பண்ணைபுரத்தில் இருந்து வெறும் காலுடன் புறப்பட்டு, இந்த இடத்திற்கு என் சொந்த காலில் வந்திருக்கிறேன்.
இதை முன் உதாரணமாக எடுத்து, இளைஞர்கள் அவரவர் துறையில் சாதித்து பெருமை சேர்க்க வேண்டும்.
இவருக்கு 82 வயதாகி விட்டது. இனி என்ன செய்யப்போகிறார் என யாரும் நினைத்து விடாதீர்கள். இது ஆரம்பம் தான். இன்னும் சாதிக்க நிறைய உள்ளது. மற்ற நாடுகளில் சிம்பொனியை அரங்கேற்றுவதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.