பணம் கொடுக்காததால் அடி, உதை தி.மு.க., கவுன்சிலர் மீது நடவடிக்கை?
பணம் கொடுக்காததால் அடி, உதை தி.மு.க., கவுன்சிலர் மீது நடவடிக்கை?
ADDED : மே 04, 2024 12:46 AM

சென்னை:புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டிவரும் முதியவரிடம், மடிப்பாக்கம் தி.மு.க., கவுன்சிலர் மற்றும் அவரது ஆதரவாளர்கள், இரண்டு லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டி, அவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திராவை சேர்ந்தவர் மண்ணு ரமணய்யா, 74; பில்டர். இவர், சென்னை மடிப்பாக்கத்தில் தங்கி, அப்பகுதி ராம்நகர் தெற்கு, 11வது பிரதான சாலையில், 14 வீடுகளை உள்ளடக்கிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டி வருகிறார்; 2020ல் துவக்கப்பட்ட கட்டுமானம், தற்போது முடியும் தருவாயில் உள்ளது.
இந்நிலையில், 188வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சமீனா செல்வம் மற்றும் ஆதரவாளர்கள், மண்ணு ரமணய்யாவிடம், இரண்டு லட்சம் ரூபாய் மாமூல் கேட்டு, நேற்று முன்தினம் மிரட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
மண்ணு ரமணய்யா இதய அறுவை சிகிச்சை செய்துள்ள முதியவர். அவர்கள் தாக்கியதில் இதயத்தில் படபடப்பு அதிகரித்து, உடலில் நடுக்கம் ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து, மண்ணு ரமணய்யா புகாரையடுத்து, மடிப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அந்த புகாரில், 'கவுன்சிலர் சமீனா செல்வம் அனுப்பியதாக கூறி, அவரது ஆதரவாளர்கள் பெரிய விமல், சின்ன விமல் மற்றும் செல்லா ஆகியோர் பணம் கேட்டு மிரட்டினர். பணம் தர மறுத்ததால் என்னை தாக்கினர்' என்று குறிப்பிட்டுள்ளார்.