கள்ளச்சாராய விவகாரத்தில் டாக்டர், நர்ஸ்கள் மீது நடவடிக்கையா? செவிலியர் கூட்டமைப்பினர் கண்டனம்
கள்ளச்சாராய விவகாரத்தில் டாக்டர், நர்ஸ்கள் மீது நடவடிக்கையா? செவிலியர் கூட்டமைப்பினர் கண்டனம்
ADDED : ஜூன் 26, 2024 07:22 AM
மதுரை : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் டாக்டர், நர்ஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என கிராம, பகுதி, சமுதாய சுகாதார செவிலியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மதுரையில் நடந்த போராட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் நிர்மலா தெரிவித்தார்.
அவர் பேசியதாவது:
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்கள் மீண்டும் குடித்து இறந்தனர். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை என டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்ததாக தகவல் வந்தது. கள்ளச்சாராயம் குடித்தவர்கள், குடும்பத்தினர் பற்றி சர்வே எடுப்பதோடு விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம்.
ஆனால் வீடு திரும்பி மீண்டும் குடித்து இறந்தவர்களுக்காக எங்கள் மீது நடவடிக்கை எடுக்க நினைப்பது கண்டனத்திற்கு உரியது. பொது சுகாதார இயக்குனரிடம் கேட்டபோது இந்த தகவல் பற்றி தனக்கு தெரியாது என்கிறார்.
இவ்வாறு பேசினார்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டியம்மாள் பேசியதாவது: தமிழகத்தில் 9000 துணை சுகாதார மையங்கள் உள்ளன. இதில் காலியாக உள்ள 3000 க்கும் மேற்பட்ட கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கூடுதலாக 1400 துணை மையங்கள் உருவாக்கப்பட உள்ளன.
இதில் நான்காண்டு செவிலியர் பயிற்சி முடித்தவர்களை நியமிக்கக்கூடாது. எங்களைப்போன்ற இரண்டாண்டு பயிற்சி முடித்தவர்கள் 10ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பணிவாய்ப்புக்காக காத்திருப்பதால் அவர்களை நியமிக்க வேண்டும்.
பதிவேற்றுவதில் சிக்கல்
2012 க்கு பின் கொடுத்த 'டேப்லெட்'கள் காலாவதி ஆகிவிட்டதால் பொது சுகாதாரத்துறையில் தாய், சேய் நலம், குடும்ப நல பராமரிப்பு பதிவேடுகளை புதிய சாப்ட்வேரில் பதிவேற்ற முடியவில்லை. புதிய 'டேப்லெட்'கள் வழங்கினால் உடனுக்குடன் பதிவேற்ற முடியும்.
'லேப்டாப், டேப்லெட்' மற்றும் அலைபேசிக்கு மாதந்தோறும் 'ரீசார்ஜ்' செய்வதற்குரிய கட்டணத்தை தாமதமின்றி வழங்க வேண்டும்.
தாலுகாவுக்கு ஒருவர் என்றுள்ள சமுதாய சுகாதார செவிலியருக்கு (சி.எச்.என்.) லேப்டாப் வழங்கினால் நாங்கள் தரும் தகவல்களை பதிவேற்ற முடியும் என்றார்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பாண்டியம்மாள், ஜெயசுதா, பிரேமா ஆனந்தி, சின்னாயி, சியாமளா உடன் இருந்தனர்.

