வி.ஐ.டி.,யில் சர்வதேச கலை விழா; நடிகர் நாக சைதன்யா பங்கேற்பு
வி.ஐ.டி.,யில் சர்வதேச கலை விழா; நடிகர் நாக சைதன்யா பங்கேற்பு
ADDED : மார் 04, 2025 01:16 AM

சென்னை: சென்னை வி.ஐ.டி., பல்கலையில், நான்கு நாட்கள் நடந்த சர்வதேச கலை விழா நிறைவடைந்தது.
வி.ஐ.டி., பல்கலையில், 'வைப்ரன்ஸ்' சர்வதேச கலை விழாவை, பிப்., 26ம் தேதி, கிரிக்கெட் வீரர் ராகுல் சஹார் துவக்கி வைத்தார். பிரபல பின்னணி பாடகர்களின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நான்கு நாட்கள் நடந்த கலை விழாவில், 200க்கும் மேற்பட்ட கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் நடந்தன.
இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும், ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., மற்றும் அண்ணா பல்கலை போன்ற தலைசிறந்த பல்கலைகள், கல்லுாரிகளில் இருந்தும், 22,000த்திற்கும் அதிகமான போட்டியாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்; போட்டிகளில் வென்றவர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன.
சர்வதேச கலை விழாவில், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை சாம்பியன் பட்டம் வென்றது. அதற்கான கோப்பையை, நடிகர் நாக சைதன்யா, வி.ஐ.டி, வேந்தர் விஸ்வநாதன் ஆகியோர் வழங்கினர்.
நிறைவு விழாவில் பேசிய நடிகர் நாக சைதன்யா, ''வாழ்வில் ஒவ்வொரு தருணத்தையும் மகிழ்ச்சியாக எதிர் கொள்ளுங்கள். கல்லுாரி படிப்பை முடித்து வெளியே சென்றதும், பல சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். 100 சதவீதம் உண்மையாக உழைத்தால் சவால்களை சாதனையாக்கலாம்,'' என்றார்.
வி.ஐ.டி., வேந்தர் விஸ்வநாதன் பேசும் போது, ''வறுமையை வெல்லும் ஆயுதம் கல்வி மட்டுமே. மாணவர்கள் உயர் கல்விக்கு செல்வதை ஊக்குவிக்க வேண்டும்,'' என்றார்.
வி.ஐ.டி., துணைத்தலைவர் செல்வம், இணை துணை வேந்தர் தியாகராஜன், கூடுதல் பதிவாளர் மனோகரன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.