தயாரிப்பாளர் சங்க முடிவு மாற்ற நடிகர் சங்கம் கோரிக்கை
தயாரிப்பாளர் சங்க முடிவு மாற்ற நடிகர் சங்கம் கோரிக்கை
ADDED : செப் 08, 2024 02:53 AM
சென்னை:'வரும் நவ., 1 முதல் படப்பிடிப்புக்கு தடை விதித்துள்ள தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என, நடிகர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
நடிகர் சங்க நிர்வாக குழுவினரும், முரளி ராமசாமி தலைமையிலான தயாரிப்பாளர் சங்க நிர்வாக குழுவினரும், 6ம் தேதி சந்தித்து பேசினர். அப்போது, இரு சங்கத்திற்கும் இடையே புதிய ஒப்பந்தம் போடுவதற்கான 11 பரிந்துரைகள், தயாரிப்பாளர்கள் சார்பாக வழங்கப்பட்டன.
தீவிர கலந்தாலோசனைக்கு பின், நடிகர் சங்கத்தின் சார்பாக இருதரப்பிற்கும் சாதகமான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான 37 பரிந்துரைகளும், நடிகர் தனுஷ் சம்பந்தப்பட்ட சுமுகமான பரஸ்பர தீர்வு அடங்கிய ஆவணங்களும் தயாரிப்பாளர் சங்கத்திடம் வழங்கப்பட்டன.
இரண்டு சங்கத்திற்கு இடையே, புதிய ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கிறோம். இந்நிலையில், புதிய படத்திற்கு பூஜை போட்டு படங்களை துவங்கக் கூடாது என்றும், நவ., 1 முதல் எந்த படப்பிடிப்பும் நடக்காது என்றும், தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிவிப்பை உடனடியாக மறு பரீசிலனை செய்ய வேண்டும். யாருக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு தயாரிப்பாளர் சங்கம் முடிவு எடுக்க விரும்புகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.