ADDED : ஜூன் 22, 2024 01:06 AM
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட, 173 பேர், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், 47 பேர் இறந்தனர்; 50 பேர் மேல்சிகிச்சைக்காக சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுஉள்ளனர்.
மீதமுள்ள, 76 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இவர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்க, சிறப்பு மருத்துவக் குழு அமைக்கப்பட்டது.
இதற்காக, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் திருச்சி ஆகிய நான்கு மாவட்டங்களில் இருந்து, பொது மருத்து வம், மயக்க மருந்து, சிறுநீரக டாக்டர்கள், செவிலியர்கள் என, மொத்தம் 56 மருத்துவ பணியாளர்கள் நேற்று முன்தினம் வரவழைக்கப்பட்டனர்.
இந்நிலையில், கூடுதலாக செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து டாக்டர்கள், செவிலியர் உள்ளடங்கிய 15 மருத்துவ பணியாளர்கள் நேற்று வரவழைக்கப்பட்டனர்.
இதுவரை, ஐந்து வெளி மாவட்டங்களைச் சேர்ந்த, மொத்தம் 71 மருத்துவ பணியாளர்கள் நோயாளிகளை கண்காணிக்கின்றனர்.

