ரயில் நிலையங்களில் குடிநீர் போதிய அளவு கிடைக்க ஏற்பாடு
ரயில் நிலையங்களில் குடிநீர் போதிய அளவு கிடைக்க ஏற்பாடு
ADDED : மே 07, 2024 09:42 PM
சென்னை:'கோடை காலத்தையொட்டி, ரயில் நிலையங்களில் பயணியருக்கு போதுமான குடிநீரை வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
கோடை காலம் துவங்கி வெயில் வாட்டுவதால், ரயில் நிலையங்களில் போதிய குடிநீருக்கான வசதியை ஏற்படுத்த வேண்டும் என, ரயில்வே வாரியம் அனைத்து மண்டலங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், அரக்கோணம், காட்பாடி, திருச்சி, கோவை உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும், தட்டுபாடு இன்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
ரயில்வேக்கு சொந்தமான இடங்களை கண்டறிந்து, வணிக பயன்பாடு மற்றும் பயணியருக்கான வசதிகளை மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். ரயில் நிலையங்களில், பயணியருக்கு தேவையான அளவுக்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
தற்போதுள்ளதை காட்டிலும், தேவைக்கு ஏற்றார் போல, கூடுதலாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் உள்ள கடைகளில், 'ரயில் நீர்' போதிய அளவில் இருப்பு வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர, சென்ட்ரல், எழும்பூர் போன்ற பெரிய ரயில் நிலையங்களில் குடிநீர் சுத்திகரிப்பு மையங்களும் அமைக்கப்பட்டு உள்ளன.
விருப்பமுள்ள பொதுத்துறை, தனியார் நிறுவனங்கள், பெரிய நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு அமைப்புகள், அறக்கட்டளைகள் உள்ளிட்டவை, கூடுதலாக ஆர்.ஓ., குடிநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

