ADDED : ஜூன் 30, 2024 12:56 AM
சென்னை:தமிழக சட்டசபை கூட்டம், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக சட்டசபை கூட்டம், கடந்த 20ம் தேதி துவங்கியது. மறுநாள் முதல் தினமும் காலை, மாலை என, இரண்டு வேளை சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக, சட்டசபைக்கு சென்ற நாட்களில் அமளியில் ஈடுபட்ட, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றப்பட்டதுடன், இக்கூட்டம் முழுதும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இதனால், அவர்கள் எந்த விவாதத்திலும் பங்கேற்கவில்லை. எனவே, கூட்டம் சுவாரஸ்யமில்லாமல் நடந்தது. மாலை கூட்டத்தில், குறைந்த அளவு உறுப்பினர்களே பங்கேற்றனர். பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்கள் மானிய கோரிக்கை குறித்து பேசாமல், தங்கள் தொகுதி பிரச்னைகளையே அதிகம் பேசினர்.
மூன்றுக்கும் மேற்பட்ட மானிய கோரிக்கை என்பதால், உறுப்பினர்களுக்கு பேச குறைந்த நேரமே ஒதுக்கப்பட்டது. கவன ஈர்ப்பு தீர்மானம் எடுக்கப்படவில்லை. துணை கேள்வி அதிகம் வழங்கப்படவில்லை. அமைச்சர்களும் தங்கள் பதிலுரையை விரைவாக முடித்து, அறிவிப்புகளை வெளியிட்டனர்.
மக்கள் தொகை கணக்கெடுப்புடன், ஜாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்; நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, மத்திய அரசை வலியுறுத்தி, இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கள்ளச்சாராய குற்றங்களுக்கான தண்டனையை அதிகப்படுத்தும் சட்ட முன்வடிவு, நான்கு நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தும் சட்டமுன்வடிவு உட்பட, 14 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. சட்டசபையில் 110 விதியின் கீழ், முதல்வர் 2026 ஜனவரிக்குள் 75,000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என்பது உட்பட முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
சட்டசபை இறுதி நாளான நேற்று, சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட பின், சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கும் தீர்மானத்தை, முன்னவர் துரைமுருகன் கொண்டு வந்தார்.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும், சட்டசபை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுவதாக, சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

