ADDED : ஜூன் 21, 2024 12:53 AM
சென்னை:அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்துார் ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எதிராக, தாமாக விசாரணைக்கு எடுத்த வழக்குகளின் தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்குகளில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்துார் ராமச்சந்திரன், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
இந்த உத்தரவுகளை மறு ஆய்வு செய்யும் விதமாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார்.
இந்த வழக்குகளில், கடந்த மார்ச்சில் மாதம் இறுதி விசாரணை துவங்கியது. இந்த மூன்று வழக்குகளிலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் வாதங்கள் நிறைவு பெற்றன.
இதையடுத்து, இந்த மூன்று வழக்குகளின் தீர்ப்பை, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

