'மாஜி' அமைச்சர் பாலகிருஷ்ணன் வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு
'மாஜி' அமைச்சர் பாலகிருஷ்ணன் வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு
ADDED : ஜூன் 26, 2024 03:59 AM
சென்னை, : பொதுச்சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட மூன்றாண்டு சிறை தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
கடந்த 1998ம் ஆண்டு, ஓசூர் அருகே பாகலுாரில் நடந்த போராட்டத்தின் போது, பஸ்கள் மீது கல் வீசி சேதப்படுத்தியதாக, 108 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர்களில், பாலகிருஷ்ண ரெட்டியும் ஒருவர். முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக பாலகிருஷ்ண ரெட்டி பதவி வகித்தார்.
இந்த வழக்கில், பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்ட 16 பேரை குற்றவாளி என, சென்னையில் உள்ள எம்.பி., -- எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், 2019ல் தீர்ப்பு அளித்தது. அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, அமைச்சர் பதவியை இழந்தார்.
சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்தனர். மனுக்களை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளி வைத்தார்.

