செந்தில் பாலாஜி கோரிக்கை ஏற்பு குற்றச்சாட்டு பதிவு தள்ளிவைப்பு
செந்தில் பாலாஜி கோரிக்கை ஏற்பு குற்றச்சாட்டு பதிவு தள்ளிவைப்பு
ADDED : ஆக 02, 2024 08:52 PM
சென்னை:முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கையை ஏற்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், வரும் 7ம் தேதிக்கு குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைத்துள்ளது.
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் விடுவிக்க கோரி, செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. குற்றச்சாட்டு பதிவுக்காக, நேற்று செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்த உத்தரவிட்டது.
குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க கோரி, செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் பரணிகுமார் புதிய மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை, நீதிபதி எஸ்.அல்லி முன் விசாரித்தார். செந்தில் பாலாஜி தரப்பில், மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், அமலாக்கத் துறை சார்பில் சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி வாதிட்டனர்.
இதையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பு மனுவை ஏற்ற நீதிபதி எஸ்.அல்லி, வரும் 7ம் தேதிக்கு குற்றச்சாட்டு பதிவை தள்ளி வைத்தார். அன்றைய தினம், செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.