அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஒரு நாள் 'சஸ்பெண்ட்'
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஒரு நாள் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜூன் 26, 2024 07:19 AM

சென்னை : கள்ளக்குறிச்சி சாராய மரணம் தொடர்பாக, சட்டசபையில் நேற்றும் பிரச்னையை கிளப்பிய அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். நேற்று ஒரு நாள் மட்டும் சபை நடவடிக்கையில் பங்கேற்க, அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் நேற்று கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தனர். சட்டசபை துவங்கியதும் பேச அனுமதி கோரினர். கேள்வி நேரம் துவங்குவதாக சபாநாயகர் அறிவித்தார்.
அமைச்சர் நேரு கேள்விக்கு பதில் அளிக்கத் துவங்கினார். அப்போது, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் எழுந்து நின்று கோஷங்கள் எழுப்பினர். சிலர் சபாநாயகர் மேஜை முன் சென்றனர்.
அப்போது சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:
நீங்கள் பேசுவது எதுவும் சபைக்குறிப்பில் ஏறாது; அமைதியாக உட்காருங்கள். சபை நடவடிக்கையில் பங்கு பெறுங்கள்; சட்டசபையை மதியுங்கள். சட்டசபை மாண்பை, ஜனநாயகத்தை மதிக்க வேண்டும்.
கேள்வி நேரம் முடிந்த பின், பேசுவதற்கு நேரம் தருகிறேன். தேவையில்லாமல் இடையூறு செய்கிறீர்கள். சட்டசபை மாண்பை குறைக்கிறீர்கள்.
நீங்கள் நினைத்த நேரம் பேச, இது பொதுக்கூட்ட மேடை கிடையாது.
தொடர்ந்து சபைக்கு குந்தகம் விளைவிப்பதால், உங்களை சட்டசபையில் இருந்து வெளியேற்ற, சபை காவலர்களுக்கு உத்தரவிடுகிறேன். இன்று ஒரு நாள் மட்டும், சட்டசபை நடவடிக்கையில் நீங்கள் கலந்து கொள்ள இயலாது.
இவ்வாறு சபாநாயகர் கூறியதும், சபை காவலர்கள் சபைக்குள் வந்து, கோஷங்கள் எழுப்பியபடி நின்ற அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்றினர்.
தொடர்ந்து நடந்த விவாதம்:
சபாநாயகர்: ஒரு கூட்டத்தொடர் நடக்கும் போது, ஒரு பொருள் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து, அனைவரும் பேசி, முதல்வர் பதில் அளித்த பின், மீண்டும் அந்த பொருள் குறித்து பேச அனுமதி கிடையாது.
இது தெரிந்தும், இந்த புறக்கணிப்பை தொடர்ந்து செய்கின்றனர். கள்ளக்குறிச்சி சம்பவத்தை அரசியலாக்கும் நோக்கத்துடன் செயல்படுகின்றனர். இது, வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அமைச்சர் நேரு: அ.தி.மு.க.,வினர் வேண்டுமென்றே திட்டமிட்டு, சபை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கின்றனர். இதன் வழியாக, தி.மு.க., வெற்றியை மறைக்க நாடகமாடுகின்றனர்.
ஏற்கனவே அவர்களை வெளியேற்றிய பின், முதல்வர் பெருந்தன்மையோடு அழைத்தார். மீண்டும் அதே தவறை அவர்கள் செய்கின்றனர்.
அவர்களிடம் எள்ளளவும் ஜனநாயகம் கிடையாது. சபைக்கு வந்து கலவரத்தில் ஈடுபட்ட நபர்களை, இந்த கூட்டத் தொடர் முழுதும் 'சஸ்பெண்ட்' செய்ய வேண்டும்.
முதல்வர்: கூட்டத்தொடர் முழுதும் என்பதில் இருந்து மாறுபடுகிறேன். ஒரு நாள் மட்டும் நீக்கி வைத்துவிட்டு, மறுபடி அவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.
நேரு: முதல்வர் கூறியதை ஏற்று, ஒரு நாள் மட்டும் சபை நடவடிக்கையில் இருந்து நீக்கி வைக்கும் தீர்மானத்தை முன்மொழிகிறேன்.
இவ்வாறு அமைச்சர் கூறியதும், தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. நேற்று ஒரு நாள் மட்டும், அ.தி.மு.க., -
எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், சபை நடவடிக்கையில் கலந்து கொள்ள தடை விதிக்கப்படுகிறது என, சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

