பா.ம.க., - வி.சி., விடும் 'கேப்' உள்ளே நுழையும் அ.தி.மு.க.,
பா.ம.க., - வி.சி., விடும் 'கேப்' உள்ளே நுழையும் அ.தி.மு.க.,
ADDED : ஏப் 08, 2024 06:16 AM
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்களும் அதிகளவில் வசித்து வருகின்றனர். தற்போது லோக்சபா தேர்தலில் பா.ஜ., வுடன் பா.ம.க.,வும்; தி.மு.க.,வுடன் வி.சி., கட்சியும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது.
வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் பிரசார கூட்டங்களில் பேசுகையில், 'இந்த தேர்தல் நமது கட்சியின் அங்கீகாரத்திற்கும் மற்றும் கட்சி சின்னத்திற்கு அங்கீகாரத்திற்குமான தேர்தல். ஆகவே, ஒவ்வொரு ஓட்டும் நமக்கு ரொம்ப முக்கியம்.
ஒரு ஓட்டு தான் என அலட்சியமாக இருக்கக் கூடாது. ஆகவே ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு ஓட்டு பானைக்கு, மற்ற ஓட்டுகள் மற்ற கட்சிக்கு என பிரிந்து விடாமல் அனைத்தையும் பானை சின்னத்திற்கே வாங்க வேண்டும் என கூறி வருகிறார்.
இது ஒரு புறம் இருக்க பா.ம.க., தங்கள் சமூகத்தின் செல்வாக்கை நிலை நிறுத்த வேண்டும் எனவும் வரும் காலங்களில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள திட்டம் தீட்டி இந்த லோக்சபா தேர்தலில் பெருவாரியான ஓட்டுகளைப் பெற்று வெற்றி பெறவேண்டும் என தீவிரமாக திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், பா.ம.க.,வினர் ஆதிதிராவிடர் பகுதிக்கும், வி.சி., கட்சியினர் வன்னியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கும் சென்று ஓட்டு கேட்டால் பிரச்னை எழுமோ என்ற நோக்கத்தில் ஓட்டு சேகரிக்க சுணக்கம் காட்டி வருகின்றனர்.
இதனை சாதகமாக பயன்படுத்தி அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் தங்கள் கட்சியில் உள்ள வன்னியர் சமூகத்தினர் மற்றும் ஆதிதிராவிடர் சமூகத்தினரை அந்தந்த பகுதிகளுக்கு நேரில் சென்று சந்தித்து, இரு சமூக ஓட்டுகளையும் கவர தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் வி.சி., மற்றும் பா.ம.க.,வும் தங்களுடைய ஓட்டுகளை தக்க வைக்க வியூகம் வகுத்து வருகின்றனர்.

