பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்காததால் தான் அ.தி.மு.க.,வுக்கு தோல்வி: மதுரை ஆதீனம்
பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்காததால் தான் அ.தி.மு.க.,வுக்கு தோல்வி: மதுரை ஆதீனம்
ADDED : ஜூன் 11, 2024 06:16 AM

மதுரை: “அ.தி.மு.க., தன் கட்டமைப்பை மேம்படுத்தவில்லை. பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்காததால் தான் அக்கட்சி தோல்வியை தழுவியது,” என, மதுரை ஆதீனம் கூறினார்.
மதுரையில் நேற்று அவர் கூறியதாவது:
இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவிக்க காரணமானவர்களும், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். அது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
எதையும் தாங்கும் இதயம்
இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்தவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட காரணத்தாலேயே மத்தியில் காங்.,கால் ஆள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்திரா பிரதமராக இருந்த போது தாரை வார்க்கப்பட்ட நம் பகுதியான கச்சத்தீவை பிரதமர் மோடி மீட்க வேண்டும். அப்போது தான் தமிழகத்தின் மீன்வளம் அதிகரிக்கும்.
பிரதமர் மோடியை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்கின்றன. எதையும் தாங்கும் இதயம் கொண்டவர் அவர். பா.ஜ., பெரும்பான்மைக்கும் குறைவான தொகுதிகளில் வெற்றி பெற்றதால், அக்கட்சியை தோல்வி அடைந்ததாக விமர்சிக்கின்றனர்.
ஒருவேளை பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருந்தால், பட்டனை அழுத்தியவுடன் தாமரைக்கு ஓட்டு விழுந்தது; அதனாலேயே அக்கட்சி வெற்றி பெற்றது என கூறியிருப்பர்.
நல்ல வேளையாக அப்படி சொல்ல முடியாமல் போய் விட்டது. அதற்காக, பா.ஜ., மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர் எனக் கூற முடியாது. 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்களே, 99 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றுள்ளனர்.
சுட்டு விடுவர்
காங்., ஆட்சியில் எத்தனை முறை மாநில அரசுகள் கலைக்கப்பட்டன என்பது எல்லாரும் அறிந்ததுதான். ஆனால் பா.ஜ., ஆட்சியில் எந்த மாநிலத்திலும் ஆட்சிக் கலைப்பு செய்யப்படவில்லை.
இலங்கை தமிழர்களுக் காக தனி நாடு வேண்டுமென விரைவில் பிரதமரை சந்தித்து வலியுறுத்தப் போகிறேன். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு கொடுக்கும் அனைவருக்கும் நான் ஆதரவு கொடுப்பேன்.
இலங்கைக்கு நான் சென்றால், என்னை சுட்டு விடுவர். இலங்கை யில் தமிழர்கள் அதிக அளவில் இருக்கின்றனர். இருந்தாலும் சிங்கள வெறியர்கள் இருக்கின்றனர்.
பிரதமர் மோடி, சிவன் மீது பக்தியாக இருக்கிறார்; தியானம் செய்கிறார்; விபூதி பூசிக் கொள்கிறார். காசி விஸ்வநாதர் கோவிலை மீட்டெடுத்தார்; எல்லா மதங்களையும் ஆதரிக்கிறார். ஆகவே அவரை நான் ஆதரிக்கிறேன்.
தேர்தலில் பா.ஜ., வுடன் கூட்டணி வைக்காததால் தான் அ.தி.மு.க., தோல்வியை தழுவியது. அக்கட்சி கட்டமைப்புகளை மேம்படுத்தவில்லை. பா.ஜ., நாம் தமிழர் கட்சிகள் நல்ல கட்டமைப்புகளை உருவாக்கி உள்ளன. இது தான் நடந்து முடிந்த தேர்தல் வெளிப்படுத்தும் செய்தி.
இவ்வாறு கூறினார்.

