ஓட்டு எண்ணிக்கை மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் 'மக்கர்' தமிழக அரசே பொறுப்பு என்கிறது அ.தி.மு.க.,
ஓட்டு எண்ணிக்கை மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் 'மக்கர்' தமிழக அரசே பொறுப்பு என்கிறது அ.தி.மு.க.,
ADDED : மே 01, 2024 11:16 PM
மதுரை:தமிழகத்தில் தேர்தல் முடிந்த நிலையில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்கும் மையங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகி வருவதற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் என அ.தி.மு.க., வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்திற்கு ஏப்.,19ல் லோக்சபா தேர்தல் நடந்தது. ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4ல் நடக்கிறது. இன்னும் ஒருமாதம் உள்ள நிலையில், ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்கும் மையங்களில் துணை ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்களை கொண்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.
இந்நிலையில் நீலகிரி, ஈரோடு, தென்காசியில் அடுத்தடுத்து கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகின. உடனடியாக சரிசெய்யப்பட்டாலும் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளது. இதற்கு தமிழக அரசே பொறுப்பு என மதுரை அ.தி.மு.க., வேட்பாளர் டாக்டர் சரவணன் கூறினார்.
அவர் கூறியதாவது:
ஓட்டு எண்ணிக்கை மையங்களில் ஏற்படும் குளறுபடிகளுக்கு தமிழக அரசே பொறுப்பு ஏற்க வேண்டும். ஏனெனில் மையங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. துணை ராணுவம், பாதுகாப்பு பணியை மட்டுமே மேற்கொள்கிறது.
கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்டவற்றை கண்காணிப்பது தமிழக அரசின் அதிகாரிகள் தான். எனவே 'ஷார்ட் சர்கியூட், மின் பிரச்னை' எனக் கூறி கேமரா பழுதை நியாயப்படுத்த முடியாது.
சில இடங்களில் வேண்டுமென்றே மின்தடை ஏற்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. 'பவர் கட்' செய்ததால் ஆட்சியை தி.மு.க., இழந்தது என்பதை யாரும் மறந்திருக்க மாட்டர்.
எனவே ஓட்டு எண்ணிக்கை மையங்களில் மின் தடை ஏற்படாத வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும். சில மையங்களில் கட்சி ஏஜன்டுகளுக்குரிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

