'அ.தி.மு.க., சக்திகள் இணைய சிலர் இடையூறாக உள்ளனர்'
'அ.தி.மு.க., சக்திகள் இணைய சிலர் இடையூறாக உள்ளனர்'
ADDED : ஜூலை 26, 2024 10:23 PM
சென்னை:''அ.தி.மு.க., சக்திகள் இணைய சிலர் இடையூறுகளாக உள்ளனர். அவற்றை களைந்து ஒன்று சேர்ந்தால்தான், எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற முடியும்,'' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின், அவர் அளித்த பேட்டி:
பிரிந்திருக்கும் அ.தி.மு.க., சக்திகள் இணைய வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். அதற்கு சிலர் இடையூறுகளாக உள்ளனர். அந்த இடையூறுகளை களைந்து, ஒன்று சேர வேண்டும். அப்போதுதான் அ.தி.மு.க., எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற முடியும்.
லோக்சபா தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து பேச, கூட்டம் போடுவதாக பழனிசாமி தெரிவித்தார். ஆனால், இணைப்பு குறித்து பேசக் கூடாது என வாய்ப்பூட்டு போட்டு விட்டார். அ.தி.மு.க., சக்திகள் பிரிந்து இருப்பதுதான், தோல்விக்கான முக்கிய காரணம்.
அ.தி.மு.க., பொதுக்குழு தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் உள்ளது. அந்த தீர்ப்புதான் இறுதி தீர்ப்பு என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அந்த வழக்கை தற்போது விசாரணைக்கு எடுத்துள்ளனர். சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்ட எனக்கு, 3.42 லட்சம் ஓட்டுகள், அதாவது பதிவான ஓட்டுகளில், 34 சதவீதத்தை அளித்து, மக்களும், அ.தி.மு.க., தொண்டர்களும் அங்கீகரித்துள்ளனர்.
அ.தி.மு.க.,வில் இருந்து பலரும் எங்களிடம் பேசுகின்றனர். அதை வெளியில் கூற இயலாது. ஆறு பேர் வலியுறுத்தியதை மறைக்க, பழனிசாமி ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எப்போது பேசினாலும் கோபமாக பேசுவார்; நல்ல கருத்தை கூறுவார்; நியாயமாக பேசுவார். கட்சி இணையாமல், எந்த தேர்தலிலும் வெற்றி பெற இயலாது எனக் கூறியுள்ளார்.
அ.தி.மு.க., தொண்டர்கள் விருப்பமே என் விருப்பம். கட்சியை இணைக்க முழு முயற்சிகள் எடுத்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

